வெளியிடப்பட்ட நேரம்: 17:03 (10/05/2018)

கடைசி தொடர்பு:17:42 (10/05/2018)

பொறியியல் விண்ணப்பக் கட்டணம்! அண்ணா பல்கலைக்கழக முடிவில் திடீர் மாற்றம்

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பக் கட்டணத்தை பே-ஆர்டர் மற்றும் டி.டி மூலம் கட்டலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் இன்று காலை தெரிவித்திருந்ததைத் தற்போது மறுத்துள்ளது. 

அண்ணா பல்கலைகழகம்

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணத்தை பே-ஆர்டர் மற்றும் டி.டி மூலமாகச் செலுத்தலாம் என கூறியிருந்தது. மேலும், கிராமப்புற மாணவர்களின் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு 42 இடங்களில் இ-சேவை மையம் அமைக்கப்பட்டு 30 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்துள்ளார். 

இதைத் தொடர்ந்து தற்போது டி.டி, பே-ஆர்டர் மூலம் பணம் செலுத்துவதில் சிக்கல் உள்ளதால் அதை அனுமதிக்க முடியாது என்றும் அதற்குப் பதில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம் என உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

''விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் மாணவர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படக் கூடாது. எளிதாக எப்படி கட்டணம் செலுத்த முடியும் என்பதை நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்'' என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.