வெளிவந்துவிட்டது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி...

விலை உயர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸின் முதல் எஸ்யூவி வெளியாகிவிட்டது. ரீ டியூன் செய்யப்பட்ட இன்ஜின், அதிக பவர், எஸ்யூவியிலேயே அல்ட்ரா லக்ஸசி...இன்னும் என்ன உள்ளது என்று பார்ப்போம்.

சொகுசு கார்களிலேயே விலை உயர்ந்த கார்களைத் தயாரிக்கும் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ்-ன் முதல் எஸ்யூவி வெளியாகிவிட்டது. கல்லினன் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தக் கார், படு பயங்கர சொகுசாகவும் ஆஃப் ரோடில் பட்டையைக் கிளப்பும் விதமாகவும் இருக்கும் என்று இந்நிறுவனம் கூறுகிறது. கல்லினன் என்பது ஆப்பிரிக்க சுரங்கத்தில் கிடைத்த 3,106 காரட் வைரத்தின் பெயர். இந்த வைரத்தை 9 பாகங்களாகப் பிரித்து அதில் ஒன்று இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் வைத்துள்ளார்கள் அந்தளவு பெரும் மதிப்புடையது இந்த வைரம். 

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினனை எஸ்யூவி என்பதற்குப் பதிலாக ' high sided vehicle' என்று சொல்கிறார்கள். இந்தக் கார் ஃபேன்டமின் டிசைனை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. பார்க்க உயரம் கூட்டப்பட்ட ஃபேன்டம் போலவே இருக்கிறது. அதே ஸ்டீல் க்ரில், புருவம் போன்ற LED DRL-கள், மேட்ரிக் LED ஹெட்லைட்டுகள் என எல்லாமே ஃபேன்டம் மயம். ஏர் இன்டேக் மற்றும் பனி விளக்குகள் பெரிதாக உள்ளன. கல்லினனுக்கு இது கம்பீரமான தோற்றத்தைத் தருகிறது. பின் பக்கம் ரோல்ஸ் ராய்ஸ் லேகோவுடன்கூடிய D வடிவ டெயில் லைட்டுகள் வருகிறது. இந்தக் காரில் சூசைடு டோர்ஸ் எனப்படும் பின்னோக்கி திறக்கும் கதவுகள் உள்ளன. நீளமான ஷோல்டர் லைன், 22 இன்ச் வீல், ஸ்மூத்தாக இறங்கும் ரூஃப் லைன், தனியாகத் தெரியும் பூட் கதவுகள் என க்ளாசிக் மற்றும் மாடர்ன் கலந்த பக்கா ரோல்ஸ் ராய்ஸ் டிசைன் தெரிகிறது. போட்டியாளரான பென்ட்லி பென்டாகியாவைவிட பெரிதாகத் தெரிகிறது கல்லினன். 

கல்லினன்

ரோல்ஸ் ராய்ஸ் என்றால் சொகுசுக்கு எப்போதுமே குறைவில்லை. இந்தக் காரில் மிருதுவான லெதர் சீட்டுகளும் டேஷ் போர்டில் மர வேலைப்பாடுகளும் உள்ளன. இதுவரை எந்தக் காரிலும் இல்லாத ஒரு வசதியை ரோல்ஸ் ராய்ஸ் இதில் தந்துள்ளது. காரின் பூட் பகுதியில் சிறிய காக்டெயில் டேபிளுடன்கூடிய இரண்டு லெதர் சீட்டுகளைப் பட்டனை அழுத்துவதன் மூலம் திறக்கும் விதமாகத் தந்துள்ளது. இதை  Viewing Suite என்று சொல்கிறார்கள். கார் நிறுத்தப்பட்டிருக்கும்போது பின்பக்கம் சென்று டிக்கியைத் திறந்து இந்தச் சீட்டில் உட்கார்ந்துகொள்ளலாம். இதன் இன்டீரியர்கள் ஃபேன்டமை போலவே உள்ளன. ஸ்டியரிங் வீல் சிறியது. வழக்கம்போல முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், அனலாக் கடிகாரம், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவை உள்ளன. முதல் முறையாக  Ecstasy controller எனும் சென்டர் கன்சோல் வந்துள்ளது. ஏர் சஸ்பென்ஷன் மூலம் காரின் உயரத்தை மாற்ற கன்ட்ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, காரில் பிரத்தியேகமாக ஆஃப் ரோடு பட்டனும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆஃப்ரோடு ஆன்செய்து ஓட்டுவதன் மூலம் எந்தப் பாதையில் வேண்டுமானாலும் போக முடியும் என்கிறார்கள். சஸ்பென்ஷன் தானாக மாற்றப்பட்டு, அனைத்து வீல்களுக்கு டிராக்‌ஷன் கிடைக்கும்விதம் பவர் சமமாகக் கொடுக்கப்படும் என்கிறார்கள். 

கல்லினன்

ஃபேன்ட்டம் போலவே அலுமினியம் ஸ்பேஸ் ஃபிரேமில் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தக் காரில் night vision, vision assist, daytime மற்றும்  night-time wildlife, பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது எச்சரிக்கை செய்யும் pedestrian warning; alertness assistant; நான்கு கேமரா கொண்ட பானராமின் வியூ, all-round visibility, ஹெலிகாப்டர் வியூ; ஆக்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், விபத்தைத் தடுக்கும் கொல்லிஷன் வார்னிங் எனப் பல பாதுகாப்பு வசதிகள் உள்ளன. சொகுசு. பாதுகாப்பு மட்டுமல்ல ஃபன்னும் நிறைய உள்ளது. கல்லினன் ஒரு முழுமையான எஸ்யூவி என்கிறது ரோல்ஸ் ராய்ஸ். இந்தச் காரை 4 ஆண்டுகளாக அனைத்து விதமான சாலைகளிலும் சாலை இல்லாத பகுதிகளிலும் டெஸ்ட் செய்துள்ளது இந்நிறுவனம். இந்தக் காரில் உள்ள ரோல்ஸ் ராய்ஸின் 6.8 லிட்டர்  V12 இன்ஜின் 571 bhp பவர் மற்றும் 850 Nm டார்க் தரும்விதம் டியூன் செய்யப்பட்டுள்ளது. எஸ்யூவி என்பதால் மொத்த டார்க்கையும் 1,600 rpm-மில் தரும் விதமாக டியூன் செய்யப்பட்டுள்ளது. காரின் டாப் ஸ்பீடு 250 கி.மீ-க்கு மேல் போகாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பென்ட்லியின் பென்டாக்கியா காருக்கு போட்டியாக வந்துள்ள கல்லினன் அதைவிட நீளமாகவும் அகலமாகவும் 3,295 mm வீல் பேஸ் கொண்டுள்ளது. 5 சீட்டர் காரான இதில் பென்டாக்கியாவைவிட அதிக பூட் ஸ்பேஸ் (600 லிட்டர்) உள்ளது.

விலையைப் பொருத்தவரை ரூ.4.5 கோடிக்கு விற்பனை செய்யப்படும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்டைவிட 10 சதவிகிதம் மட்டுமே கூடுதல் விலையிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!