வெளியிடப்பட்ட நேரம்: 10:53 (11/05/2018)

கடைசி தொடர்பு:10:53 (11/05/2018)

``டி.பி கலரை மாத்தினா பாலியல் துன்புறுத்தல் நின்றிடுமா?!” - 'Touch Me Not' குறும்பட இயக்குநர் ஹரி

``நம்ம குழந்தைகளைப் பார்த்துக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நம்மக்கிட்டதான் இருக்கு. தப்பு நடந்தா நீ எதுக்குடி அங்க போனன்னு சொல்லி குழந்தைகளை அடிக்கிறதை நிறுத்திட்டு தப்பைத் தட்டிக் கேட்கிற துணிச்சலை அவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும்”

'Touch Me Not' குறும்படத்தின் போஸ்டர்

ணவன் மனைவி இருவரும் அலுவலகத்துக்குக் கிளம்பும் பரபரப்பில் இருக்கிறார்கள். டைனிங் டேபிளில் அமர்ந்து ஜாலியாக வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கும் அந்தச் சுட்டியிடம், ``பாப்பா, அம்மா ஆபீஸ் போய்ட்டு வரேன். சமத்தா இருக்கணும் சரியா? அங்கிளை டார்ச்சர் பண்ணக் கூடாது” எனச் சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள். 

உறவினராக வந்திருக்கும் அந்த நபர், ``சிவகார்த்தியேன் பாட்டு பார்க்கறியாம்மா. வா வா மாமா மடியில் உட்கார்ந்து பாரு'' என அந்தக் குழந்தையை அழைக்கிறார். மாமாவின் மடியில் அமர்ந்து பாடலை ரசித்துக்கொண்டிருக்கும்போதே, அவளின் தோள் மீது கை அழுத்துகிறது. ``மாமா விட்டுருங்க மாமா... ப்ளீஸ் என்னை விட்டுருங்க“ என்று கெஞ்சுகிறாள். 

குறும்படத்திலுள்ள காட்சிகள்

அந்த உறவினர் மட்டுமன்றி, பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர், எதிர் வீட்டுப் பையன் என அவளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துகிறார்கள். இது படத்தின் பாதி மட்டுமே. பிறகுதான், ஒரு சிறந்த குறும்படத்துக்கான முத்திரையைப் பதிக்கிறது, Touch me not. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் இந்தக் குறும்படத்தின் இயக்குநர், ஹரி பிரகாஷ்.

``குழந்தை கடத்தல், பள்ளி மாணவி வன்புணர்வு, 7 வயதுக் குழந்தைக்குப் பாலியல் சீண்டல் போன்ற செய்திகளை இன்றைய நாளில் கடக்காமல் போகவே முடியறதில்லை. 10 சம்பவங்களில் ஏதாவது ஒண்ணு மட்டும் கொஞ்சம் பெருசா தெரிஞ்சதுன்னா, எல்லோரும் சேர்ந்து போராட ஆரம்பிச்சிடறோம். வாட்ஸ்அப் புரொஃபைலை கறுப்புக்கு மாத்திடறோம். இதனால், குற்றங்கள் குறையப் போறதில்லை. தப்பு பண்றவன் குழந்தை, பாட்டி எனப் பார்க்கிறதில்லை. பெரியவங்களா இருந்தா சத்தம்போட்டு எதிர்க்க முடியும். குழந்தைகள் என்ன பண்ண முடியும்? அவங்களால் பெரிய அளவில் பிரச்னை வராதுன்னு நினைச்சுத்தான் தப்பா நடந்துக்க முயற்சி பண்றாங்க. அதை நாமதான் தட்டிக் கேட்கணும்” - ஆதங்கத்துடன் தெறிக்கிறது ஹரி பிரகாஷின் வார்த்தைகள்.

``அப்போ இந்தக் குறும்படத்தால் இனி குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுக்கப்படுமா?''

``நான் அப்படிச் சொல்லலை. இதற்கு முன்னாடியும் குழந்தைகளுக்கு விழிப்புஉணர்வு கொடுக்கும் பல படங்கள் வந்திருக்கு. ஆனாலும், குற்றம் செய்யறவங்க செஞ்சுட்டேதான் இருக்காங்க. ஸ்கூல் படிக்கும் ஒரு சிறுமியே, தனக்கு ஏற்படும் துன்புறுத்தலிலிருந்து தன்னை எப்படி மீட்டுக்கணும், வீட்டிலும் வெளியிலும் எவ்வளவு கவனமா இருக்கணும் என்று சொல்ல நினைச்சோம். வீடுகளில் பேரன்ட்ஸ் சொல்லிக்கொடுக்கும், `குட் டச் பேட் டச்' விஷயத்தை காட்சி மூலமாக குழந்தைகளுக்குக் கொடுத்திருக்கோம். சுதந்திரமா வாழவேண்டிய குழந்தைகளை தவறான கண்ணோட்டத்தில் அணுகுபவர்களுக்கு முடிஞ்ச அளவுக்கு பயத்தைக் கொடுக்க நினைச்சு இந்தப் படத்தை எடுத்தோம். நினைச்ச மாதிரியே இந்தப் படம் நல்லா வந்திருக்கு. 

இயக்குநர் ஹரி

படத்தை திலகவதி ஐ.பி.எஸ் மேடமிடம் போட்டுக் காட்டினோம். பார்த்து முடிச்சதும், `தம்பி இந்தக் கருத்தை நான் வரவேற்கிறேன். நான் உங்களுக்கு என்ன உதவி பண்ணட்டும்? நானும் குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் பற்றி கட்டுரைகள் எழுதிட்டிருக்கேன். இனி நாம சேர்ந்து முடிஞ்ச மாற்றத்தைக் கொடுப்போம்'னு சொன்னாங்க. ஒரு முக்கியமான சோஷியல் மெசேஜை யாரோ சொல்றதைவிட, திலகவதி மேடம் மாதிரியான ஆளுமைகள் சொல்லும்போது, மக்களிடம் சரியாகப் போய் சேருமில்லியா? அதுவும் எங்களுக்கு ஒர்க் அவுட் ஆகியிருக்கு” என்கிறார் ஹரி பிரகாஷ்.

முகநூலில் மட்டும் இந்தப் படத்தை 18 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். ``நிறைய பாராட்டுகள், விமர்சனங்கள் வந்துச்சு. முக்கியமா ஒரு பெண், `இந்தப் படம் மட்டும் நான் சின்னப் பொண்ணா இருக்கும்போது வந்திருந்தால், என்னைக் காப்பாத்திட்டிருப்பேன்'னு சொன்னாங்க. அந்த கமென்ட்தான் இதுமாதிரியான படங்களைத் தொடர்ந்து இயக்க உந்தித் தள்ளுது” என்கிறார் ஹரி பிரசாத்.

படக்குழுவினர்

சென்னையின் பல பள்ளிகளிலும் இந்தக் குறும்படத்தைத் திரையிட இருக்கிறார்களாம். குடிசைப் பகுதி குழந்தைகளிடமும் இதை எடுத்துச்செல்ல பல அமைப்புகள் தயாராகின்றன. 25 வயதிலேயே தன் கையில் கிடைத்திருக்கும் மீடியா ஆயுதத்தை, சமூக சீர்திருத்தத்துக்காகப் பயன்படுத்தும் ஹரி பிரகாஷ், ``நம்ம குழந்தைகளைப் பார்த்துக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நம்மிடம்தான் இருக்கு. தப்பு நடந்தால், நீ எதுக்குடி அங்கே போனே'னு குழந்தைகளை அடிக்கிறதை நிறுத்திட்டு, தப்பை தட்டிக் கேட்கும் துணிச்சலைச் சொல்லிக் கொடுக்கணும்” என்கிறார்.


டிரெண்டிங் @ விகடன்