காலேஜ் ரோட்டில் தினமொரு விபத்து... டிஜிட்டல் இந்தியாவால் தடுக்க முடியாதா?!

எப்போது சென்றாலும் பீர் பாட்டில்கள் உடைந்து சிதறிக் கிடக்கும். ஒருநாள் நான் சென்றபோது ஒருவர் குடித்துவிட்டு சுயநினைவின்றி படுத்துக்கிடந்தார். அவரைக் கடந்து செல்ல பயந்து மீண்டும் இங்கு வந்து சாலையைக் கடந்து சென்றேன்

காலேஜ் ரோட்டில் தினமொரு விபத்து... டிஜிட்டல் இந்தியாவால் தடுக்க முடியாதா?!

``சென்னைக் கல்லூரி சாலையில் உள்ள மகளிர் கிறித்துவக் கல்லூரி அருகில் 10000-க்கும்  மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிகின்றனர். ஆனால், அவர்கள் சாலையைக் கடக்க அந்த இடத்தில் ஒரு சிக்னலோ வேகத்தடையோ பாதசாரிகள் கடக்கும் இடமோ எதுவும் இல்லை. அமைக்கப்பட்டுள்ள மேம்பாலமும் சரியாகப் பராமரிக்கப்படவில்லை. தினமும் ஒரு விபத்து நடக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. இதற்கு ஒரு விடிவு காலம் கொண்டு வர முடியுமா?" என்ற செய்தியுடன் விகடன் அலுவலகத்துக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதைப்பற்றி மேலும் தகவல் தெரிந்துகொள்ள அங்கு சென்று அவரைச் சந்தித்தோம்.

``நான் அனிதா. இங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன்” என்று பேசத் தொடங்கிய அவர் ``கடந்த ஆண்டு 9 மாதம் கர்ப்பமாக இருந்த போதுதான் எனக்கு விபத்து ஏற்பட்டது. 15 நிமிடங்களுக்கும் மேலாகச் சாலையைக் கடக்கக் காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் வாகனங்கள் வந்த வண்ணமே இருந்தன. அலுவலகத்துக்குச் செல்ல நேரம் ஆனதால் சாலையைக் கடக்க முயற்சி செய்தேன். அப்போது இரு சக்கரவாகனத்தில் வந்த ஒருவர் என் மீது இடித்து விட்டார். கடவுள் புண்ணியத்தால் பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், அன்று சாலையைக் கடக்கும் போது ஏற்பட்ட பயமும் அதிர்ச்சியும் இன்றும் நீங்கவில்லை"என்று பதற்றத்துடன் பேசினார்.

விபத்துப் பகுதி

மேலும் பேசிய அவர் ``கடந்த மாதம் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி ஒருவரை இடித்து விட்டு வாகனம் சென்றது. காயங்களுடன் சாலையோரம் கொண்டுவரப்பட்ட அந்த மூதாட்டி பயத்தில் உறைந்து அழத்தொடங்கினார். பின்னர் அவரைச் சமாதானப்படுத்தி ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவைத்தோம்"என்றார்.

அங்கு அருகில் காணப்பட்ட  மேம்பாலத்தின் பயன்பாடு எவ்வாறு உள்ளது என்று கேட்டதற்கு,``அது பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கட்டப்பட்டதா அல்லது குடிகாரர்களுக்குக் கட்டப்பட்டதா என்ற சந்தேகம் உள்ளது. எப்போது சென்றாலும் பீர் பாட்டில்கள் உடைந்து சிதறிக் கிடக்கும். ஒருநாள் நான் சென்றபோது ஒருவர் குடித்துவிட்டு சுயநினைவின்றி படுத்துக்கிடந்தார். அவரைக் கடந்து செல்ல பயந்து மீண்டும் இங்கு வந்து சாலையைக் கடந்து சென்றேன். இந்தப் படிகளை ஏறிக்கடக்க முதியவர்கள் சிரமப்படுவதால் அவர்கள் சாலையைக் கடந்து செல்ல முற்படுகின்றனர். அப்போதுதான் விபத்து நிகழ்ந்தது. எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் கனகா என்ற பெண் சாலையைக் கடக்கும்போது விபத்துக்குள்ளானார்" என்று வருத்ததுடன் கூறினார்.

கனகாவைச் சந்தித்துப் பேசினோம். அப்போது பேசிய அவர், ``10 நாள்களுக்கு முன்னர் அலுவலகத்திற்குச் செல்வதற்காக நீண்ட நேரம் சாலையைக் கடக்க காத்துக்கொண்டிருந்தேன். நீண்ட நேரமாகியும் வாகனங்கள் தொடர்ந்து வந்ததால் சற்று காலியாக இருந்த போது நான் சாலையைக் கடக்கச் சென்றேன். அப்போது வேகமாக வந்த இருச்சக்கரவாகனம் ஒன்று என் காலில் முட்டியது. இதனால் எனது காலில் காயம் ஏற்பட்டது. என்னைத் திட்டியவாரே அந்த வாகனத்தில் வந்தவர் சென்று விட்டார்" என்று வேதனையுடன் கூறினார்.

நடைபாலம்

இங்கு நடக்கும் விபத்துகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரைச் சந்தித்துப் பேசினோம். அப்போது பேசிய அவர் ``இங்கு விபத்துகள் மிகவும் சாதாரணமாக நடைபெறுகிறது. இங்குத் தனியார் வங்கி ஊழியர்கள், சாஸ்த்ரி பவன் மற்றும் பிற அலுவலக ஊழியர்கள் என ஏறத்தாழ 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் சாலையைக் கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். அரசு கட்டிவைத்துள்ள மேம்பாலத்தால் பொதுமக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எப்போதும் அசுத்தமாகவே இருப்பதால் அதை பொதுமக்கள் பயன்படுத்தத் தயக்கம் காட்டுகின்றனர். மாநகராட்சி அலுவலகம் இதை முறையாகப் பராமரித்தால் பொதுமக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இங்கு அலுவலகங்கள் அதிகமாக உள்ளதால், பெட்டிக்கடைகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அவற்றுள் பெரும்பான்மையானவை நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ளதால் நடைபயணிகள் சாலையில் நடந்து செல்கின்றனர். இதனாலும் விபத்து ஏற்படுகிறது"என்றார்.

- பாதசாரிகள் அதிகமானோர் இருந்தால் அவர்களின் எடையைக் கணித்து சிக்னலை இயக்கும் சென்சார்கள் பல நாடுகளில் பல ஆண்டுகளாகச் செயல்பாட்டில் இருக்கிறது.

- வளைவுகளில் பெரிஸ்கோப் போன்ற கண்ணாடிகள் நம் ஊரிலே சில இடங்களில் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவை வளைவில் வரும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளைத் திரும்பும் முன்னரே பார்க்க உதவும். இதுவும் வளைவுகளில் விபத்துகளைக் குறைக்க உதவும்.

- நடைபாலங்களைக் கடக்க முடியாத முதியவர்களுக்கு மின்தூக்கிகள், எஸ்கலேட்டர் ஆகியவையும் புழக்கத்தில் இருக்கும் விஷயங்கள்தாம்.

உலகம் முழுவதும் சாலை விபத்துகளைக் குறைக்க பலவித தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் இன்னமும் அடிப்படை விஷயமான சிக்னலையே நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை. சிக்னல் இருந்தும் விபத்துகள் நடக்கிறது என்பது வேறு பிரச்னை. தேவையான சிக்னலோ, வேகத்தடையோ இல்லாமல் இருப்பதுதான் வேதனையான விஷயம். 

அங்கு நடைபெறும் விபத்தைத் தடுக்க `விரைவில் அங்கு வேகத்தடை அமைக்கவும், சிக்னல் அமைக்கவும், மேம்பாலத்தைச் சீராகப் பராமரிக்கவும் சென்னை மாநகராட்சி ஆவன செய்யவேண்டும்'' என்பதே இந்தப் பகுதி மக்கள் அனைவரும் வைக்கும் கோரிக்கையாக உள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!