வெளியிடப்பட்ட நேரம்: 20:39 (10/05/2018)

கடைசி தொடர்பு:20:39 (10/05/2018)

கோவை குட்கா ஆலை வழக்கு: ஜாமீனில் வெளிவந்த தி.மு.க பிரமுகர் மீண்டும் கைது!

கோவை குட்கா ஆலை விவகாரத்தில், தி.மு.க-வின் தளபதி முருகேசன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை குட்கா ஆலை விவகாரத்தில், தி.மு.க நிர்வாகி தளபதி முருகேசன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குட்கா

கோவை மாவட்டம், கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த குட்கா ஆலை வழக்கு திடீர் திருப்பங்களை சந்தித்து வருகிறது. ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்படாத நிலையில், குட்கா ஆலை விவகாரத்தில் போராட்டம் நடத்திய தி.மு.க-வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தி.மு.க-வினர் 7 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, இந்த குட்கா ஆலைக்கு, தி.மு.க-வின் முன்னாள் ஊராட்சித் தலைவர் தளபதி முருகேசன் உதவியதாக, கோவை எஸ்,பி மூர்த்தி தெரிவித்தார். இது தி.மு.க-வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கடந்த வாரம் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே, இந்த வழக்கில் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்திக் உள்ளிட்டோருக்கு கோவை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தளபதி முருகேசன்

இந்நிலையில், கடந்த சில நாள்களாக தலைமறைவாக இருந்த, தி.மு.க-வன் தளபதி முருகேசனை, போலீஸார் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாமீனில் வெளிவந்த அவரைப்பற்றி, போலீஸ் விசாரணையில் ஆலையின் மேலாளர் ரகுராம் சொன்னத் தகவலின் அடிப்படையில், முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த முருகேசன், கடந்த மூன்று நாள்களாக சூலூர் காவல்நிலையத்தில் கையெழுத்துப் போடவில்லை. இதனால், விதிகளை மீறியது மற்றும் வழக்கில் தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, கண்ணம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில், நேற்று மற்றும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது குட்கா ஆலை தொடர்பான சில முக்கிய ஆவணங்களை அவர்கள் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.