வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (10/05/2018)

கடைசி தொடர்பு:23:00 (10/05/2018)

அரசை நம்பிப் பலனில்லை - குடிநீர்த் தேவைக்காக கிராம மக்கள் ஒன்றிணைந்து தோண்டிய கிணறு!

 கிராமத்தின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய அரசு உதவியை எதிர்பார்க்காமல் ஊர் மக்களே ஒன்று கூடி குடிநீர் கிணறு ஏற்படுத்தி அசத்தியுள்ளனர் ராமநாதபுரம் மாவட்டத்தினை சேர்ந்த கருத்தக்குடி கிராமத்தினர்.

கிராமத்தின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய அரசு உதவியை எதிர்பார்க்காமல் ஊர் மக்களே ஒன்று கூடி குடிநீர் கிணறு ஏற்படுத்தி அசத்தியுள்ளனர் ராமநாதபுரம் மாவட்டத்தினை சேர்ந்த கருத்தக்குடி கிராமத்தினர்.

கருத்தக்குடி கிராம மக்கள் அமைத்த குடிநீர் கிணறு.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணிக்கு அருகே உள்ளது கருக்காத்தி கிராமம். மேலமடை ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் குடிநீர்த் தேவைக்காக கிராமத்தில் நல்ல தண்ணீர் கிணறு ஒன்றைப் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக இந்தக் குடிநீர் கிணற்றில் நீர் வற்றிப் போனது. இதையடுத்து கிணற்றினை ஆழப்படுத்திய நிலையில், குடிநீர் உப்புத் தன்மை கொண்டதாக மாறிப்போனது. வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வரும் காவிரி குடிநீரும் இவர்களது குடிநீர்த் தேவையை முழுமையாகத் தீர்க்கவில்லை. இதனால் தங்கள் கிராமத்திற்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், வழக்கம்போல் அதிகாரிகள் இவர்களது கோரிக்கையினை கண்டு கொள்ளவில்லை.

குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட கிணறு

இதையடுத்து கருக்காத்தி கிராமத் தலைவர் ராஜா தலைமையில் ஒன்று கூடிய கிராம மக்கள் தங்களுக்குள் நிதி வசூல் செய்து, புதிய கிணறு தோண்டத் திட்டமிட்டனர். இதன்படி, கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து சுமார் 2 லட்ச ரூபாய் நிதி திரட்டியதுடன் தங்கள், கிராமத்திற்கு தேவையான புதிய குடிநீர் கிணற்றினை அமைக்கும் பணியில் தாங்களே ஈடுபட்டு அதனை அமைத்துள்ளனர். ஊருக்குப் பொதுவான இடத்தில் சுமார் 25 அடி ஆழத்தில் அமைக்கப்பட்ட இந்தக் கிணற்றிலிருந்து கருக்காத்தி கிராம மக்கள் தங்கள் குடிநீர்த் தேவையைத் தீர்த்து வருகிறார்கள்.