23 நாள்களுக்குப் பிறகு ஜாமீன் கேட்கும் நிர்மலாதேவி!

அருப்புக்கோட்டைக் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி, ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று (10.04.2018) மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

நிர்மலா தேவி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணித உதவி பேராசிரியையாக இருந்தவர் நிர்மலாதேவி (50). இவர் மாணவிகளுக்குத் தவறான வழிகாட்டியதாக ஆடியோ ஒன்று கடந்த மாதம்  சமூக வலைதளங்களில் பரவி,  பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் பெயர் வரை சம்பந்தப்படுத்தி, அதிர்வுகளை உண்டாக்கியது. இந்த விவகாரத்தில் தனிவிசாரணை நடத்தவும் ஆளுநர் உடனடியாக உத்தரவிட்டார். தனியாகச் செய்தியாளர் சந்திப்பையும்  நடத்தினார்  ஆளுநர். இதன் தொடர்ச்சியாக கல்லூரி செயலாளர் ராமசாமி (70) அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் ஏப்ரல் 16 -ம் தேதி புகார் செய்தார். இதன் பேரில் மறுநாள் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இவர் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் மதுரை ஒத்தக்கடை, திருமோகூர், சக்ராநகரைச் சேர்ந்த பேராசிரியர் முருகன் (42), திருச்சுழி, பன்னிமடை, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி (39) ஆகியோரையும் கைது செய்தனர். தற்போது மூவரும் மதுரை மத்திய சிறையில் உள்ளார்கள்.

முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் தங்களை ஜாமீன் விடுதலை செய்யக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை 3 -ம் தேதி விசாரித்த விடுமுறை கால நீதிபதி சிங்கராஜ், மே 11 -ம் தேதிக்குத் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், நிர்மலாதேவி தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இவரது மனு மீதான விசாரணையும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!