”ரூ. 1 லட்சம் பணம் மற்றும் நகையை எடுத்துச் சென்றனர்” கிராம மக்கள் மீது பலியான மூதாட்டியின் மகன் புகார்!

குழந்தை கடத்த வந்ததாகக் கூறி  தாக்கப்பட்டவர்களிடம் இருந்து 30 சவரன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் பணம் 5 செல்போன்களை அத்திமூர் கிராம மக்கள் திருடிச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்குமணி, சந்திரசேகரன், மோகன்குமார், வெங்கடேசன், கஜேந்திரன் ஆகிய ஐந்து பேரை குழந்தை கடத்த வந்ததாக எண்ணி அத்திமூர் கிராம மக்கள் மிகக் கொடூரத் தாக்குதலை அவர்கள் மீது நடத்தினர். இதில் ருக்குமணி (65) என்ற மூதாட்டி பலியானார். நான்கு பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் கொடூரத் தாக்குதலில் அவர்கள் வந்த காரை அடித்து நொறுக்கினர். தாக்குதலில் பலியான ருக்குமணியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது ஊருக்கு இன்று மாலை அனுப்பிவைக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக ருக்குமணியின் மகன் கோபிநாத் போளூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் என் அம்மா ருக்குமணி கோவிலுக்கு வரும்போது 30 சவரன் நகை அணிந்து வந்தார் அந்த நகையைத் தாக்குதல் நடத்திய கிராம மக்கள் அறுத்துக்கொண்டு சென்றுள்ளனர். அதோடு ஒரு லட்சம் ரூபாய் இந்திய  பணமும், அதோடு மலேசியா ரூபாயும் இருந்தது. அதையும் எடுத்துச் சென்றுள்ளனர். 5 பேரும் மிக உயர்ந்த விலை கொண்ட செல்போன் வைத்திருந்தனர் அந்த செல்போன்களையும் திருடிச்  சென்றுள்ளனர். காரில் வைத்திருந்த பொருள்களையும் எடுத்துச் சென்றுள்ளனர் என்று புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!