Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``நிர்மலா தேவி விவகாரம் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஒன்று தான்!" -சிபிஎம் பாலகிருஷ்ணன்

"தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகச் சொல்லி,  நம் உரிமையை விட்டுக்கொடுத்து விட்டார்கள். எந்த வகையிலும் இவர்களின் இணக்கம் பயன்படவில்லை" என சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு வருகிற 14-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் வர உள்ளது. ஆனாலும், 14-ம் தேதி தமிழகம் எதிர்பார்க்கிற அதிகாரம் கொண்ட மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்குமா  என்பது சந்தேகம்தான். மத்திய அரசைப் பொறுத்தவரை, கர்நாடகா தேர்தலுக்காக என்பது ஒருபுறம் இருந்தாலும், தமிழ்நாட்டுக்குக் காவிரி பிரச்னையில், நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்  என்பதில் அக்கறை இல்லை என்பதுதான் உண்மை. 

பாலகிருஷ்ணன்

இதேபோன்று கடந்த 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என அறிவித்தபோது, அன்று ஏற்றுக்கொண்டு அடுத்த நான்கு தினங்களில், மேலாண்மை வாரியம் அமைப்பது எங்களால் முடியாது என மறுத்துவிட்டது. எனவே, வரும் 14-ம் தேதி மத்திய அரசு ஏமாற்றும் வகையில் நடந்துகொள்ளும் அல்லது பெயரளவுக்கு ஒரு திட்ட அறிக்கையைச்  சமர்ப்பிக்கும்  வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் அதிகாரம் கொண்ட மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வழக்குத்  தொடுத்தது  போல் தற்போது தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். 

இதில் தமிழக அரசு நீதிமன்றத்தில் நல்ல முறையில் சட்டப் போராட்டம்  நடத்தாமல் விட்டுவிட்டால், தமிழகத்தின் உரிமையைக்  காலத்துக்கும்  இழக்க நேரிடும். மத்திய அரசுக்கு  உச்ச நீதிமன்றம் பணிந்து செல்வது கவலையான ஒன்றாக உள்ளது. இன்றைக்குத்  தமிழக மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கை பொய்த்துப் போகிற அளவுக்குத்தான் அதன் செயல்பாடுகள் உள்ளன. மத்திய அரசு தொடர்ந்து வாய்தா கேட்கும் நேரத்தில், அதை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து வழங்க வேண்டிய கட்டாயம் என்ன உள்ளது. ஸ்கீம் தயாரிக்க கர்நாடக தேர்தலை மத்திய அரசு காரணம் காட்டி வருகிறது என்றால், மத்திய அரசு இல்லாமல்  போய் விட்டதா அல்லது மத்திய அரசு  வேறு பிரச்னைகளில் தலையிடாமல் உள்ளதா? இப்படி மத்திய அரசு சொல்லுகிறது என்றால், இது மத்திய அரசுக்கே அவப்பெயர் தான். 

பாலகிருஷ்ணன் இப்படி கொச்சையான காரணத்தை நீதிமன்றத்தில் ஏன் சொல்லுகிறார்கள் என்பது தெரியவில்லை. தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக  இருப்பதாகச் சொல்லி, அவர்களின் உரிமையை விட்டுக்கொடுத்து விட்டார்கள். இந்த இணக்கம்  அவர்களைப் பாதுகாக்க வேண்டுமானால் பயன்படும். ஆனால், தமிழகத்துக்கான திட்டத்தை மத்திய அரசிடம் இருந்து பெற இவர்களின் இணக்கம் பயன்படவில்லை என்பதை அறிய முடிகிறது. இந்நிலையில், 14-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வராவிட்டால், மீண்டும் சென்னையில் 15-ம் தேதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து  அனைத்துக்  கட்சி கூட்டத்தில் ஆலோசித்து, தமிழகத்தில் மிகப்  பெரிய அடுத்தகட்ட போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். 

நீட் தேர்வை பொறுத்தவரையில், கேள்வித்  தாளில் வந்துள்ள வார்த்தைகளும், மாணவர்களுக்குத்  தமிழகத்தில் பாடப்  புத்தங்களில் சொல்லித்  தருகிற வார்த்தைகளும்  வேறு வேறாக உள்ளதால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . மாநில அரசு நீட் தேர்வு வேண்டாம் எனக்  கூறும்போது, மத்திய அரசு ஏன் நீட் தேர்வை திணிக்க வேண்டும். தமிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் எனத்  தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. இதற்கான வழியும் சட்டத்தில் உள்ளது. 15 மாதங்கள் ஆகியும் இன்னும் மத்திய அரசு அதைக்  குடியரசுத் தலைவர் பார்வைக்கு அனுப்பவில்லை என சொல்லுகிறார்கள். எங்கள் கட்சி சார்பில் மத்திய அரசுக்குக்  கடிதம் மூலம் தமிழக அரசு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிய கடிதத்தை இன்னும் மத்திய அரசு அனுப்பாமல் உள்ளது குறித்து கேட்டுள்ளோம். மத்திய அரசின் செயல்பாடுகள் மாநில அரசின் உரிமையை நசுக்குவதாக உள்ளது.  


குட்கா வழக்கு மட்டும் இல்லாமல், பல அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிடும்போது, தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? குட்கா விவகாரத்தில் பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்  பல ஆண்டுகளாக நடைபெற்றுக்கொண்டு இருந்த ஒன்றுதான். தற்போதுதான் இந்த விவகாரம் வெளிப்பட்டுள்ளது. இதில் திடீர் என ஆளுநர்  விசாரிக்க அதிகாரம் கொடுத்தது யார் எனத்  தெரியவில்லை. அவ்வாறு விசாரணை நடத்தினாலும் ஆளுநர்  யாரையும் கைது செய்ய முடியாது. ஆட்சியில் உள்ளவர்களும் அச்சப்படுகிறார்கள். அவ்வாறு பயம் இல்லாவிட்டால், சிறப்பு விசாரணை ஆணையம்  அமைத்து விசாரிக்க வேண்டும். விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டு  உள்ள ஆளுநர் பதவி விலக வேண்டும்.

ஆனால், சி.பி.சி.ஐ.,டி விசாரணை என்கிற பெயரில் இரண்டு பேராசிரியர்களுடன் வழக்கை முடித்துக்கொள்ள ஏற்பாடுகள் நடந்து வருகிறது. காவிரி மண்டலத்தில் மீத்தேன், பெட்ரோல், ஹைட்ரோகார்பன் எடுப்பதை நிறுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் மத்திய அரசு 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், தேசிய நெடுஞ்சாலை அமைக்க உள்ளது. பண்பாட்டு நிறுவனங்கள் இயற்கை வளங்களைச்  சுரண்டிக்கொண்டு செல்ல வசதியாக இதைச்  செய்கிறது. காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள்  பல முறை பிரதமரை சந்திக்க முயற்சி செய்தும் அதற்கு அனுமதிக் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் ஆளும்கட்சிக்குக்  காவிரி விவகாரத்தில் நெருக்கடி கொடுக்கப்  பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement