வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (11/05/2018)

கடைசி தொடர்பு:10:27 (11/05/2018)

”வதந்தியால் அப்பாவிகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும்” தெகலான் பாகவி வலியுறுத்தல்!

'குழந்தை கடத்தல்காரர்கள்குறித்த வதந்திகள் காரணமாக, சந்தேகத்தின் பேரில் அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்' என எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் தெகலான் பாகவி கோரிக்கை விடுத்துள்ளார்.

தெகலான் பாகவி

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த சில வாரங்களாகவே சமூக வலைதளங்களான முகநூல், வாட்ஸ்அப்பில் வட மாநிலங்களிலிருந்து நூற்றுக்கணக்கானோர் கோடை விடுமுறையைப் பயன்படுத்தி, தமிழகத்தில் குழந்தைகளைக் கடந்த வந்துள்ளதாகத் தகவல் பரவியதையடுத்து, பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த வதந்தியால் சந்தேக நபர்களைக் காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் சம்பவங்களும் தொடர்ந்துவருகின்றன. அச்ச உணர்வு காரணமாக பிழைப்புக்காக வடமாநிலங்களிலிருந்து வந்திருக்கும் தொழிலாளர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களை, குழந்தைக் கடத்தல்காரர்கள் எனக் கருதி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த விபரீதம் காரணமாக, சென்னையிலிருந்து திருவண்ணாமலையில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு மலேசிய உறவினர்களுடன் காரில் சென்ற குடும்பத்தினர்மீது பொதுமக்கள் நடத்திய கடுமையான தாக்குதல் காரணமாக 4 பேர் படுகாயமடைந்ததோடு, ஒரு மூதாட்டி அநியாயமாக உயிரிழந்துள்ளார். அதேபோன்று, கடந்த சில நாள்களுக்கு முன்னர் வேலூர் தும்பேரி கிராமத்தில் காணாமல்போன தங்களது மகளைத் தேடி வந்த சிலரை குழந்தை கடத்தல் கும்பல் எனத் தவறாக நினைத்துத் தாக்கியுள்ளனர்.

திருவள்ளூர் ஆரணியில், குழந்தை கடத்தல் நபர் என்ற சந்தேகத்தில் மன நோயாளி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தில், சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட அதே ஊரைச் சேர்ந்த வாலிபரின் முகபாவனை வடமாநிலத்தவர் போல் இருந்ததால், மின்கம்பத்தில் கட்டிவைத்துத் தாக்கப்பட்டுள்ளார். அதேபோல, காஞ்சிபுரம் சின்னையன் சத்திரம் பகுதியில் குழந்தையைக் கடத்த முயன்றதாக பொதுமக்கள் அடித்ததில், அடையாளம் தெரியாத வடமாநில வாலிபர் உயிரிழந்தார்.

இப்படி வதந்தி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து அப்பாவிகளைத் தாக்குவது சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. சமூக வலைதளங்களில் வடமாநில இளைஞர்கள் குழந்தைகளைக் கடத்துவதாகவும், திருட வந்திருப்பதாகவும் வெளியான போலியான செய்தியை அடுத்தே பொதுமக்கள் இவ்வாறு ஆவேசமடைந்து சந்தேக நபர்களைத் தாக்குகிறார்கள். இதுபோன்ற விபரீதச் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

சந்தேகப்படும் நபர்களை எவ்வித விசாரணையும் இல்லாமல் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை, தமிழக அரசும், காவல்துறையும் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய செயலினால் அப்பாவி பொதுமக்களும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படுவதுடன், தாக்குதல் நடத்தும் பொதுமக்களும் சட்ட நடவடிக்கைக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. 

ஆகவே, இதுபோன்ற தாக்குதலுக்குக் காரணமான மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழந்தை கடத்தல் என்ற அச்ச உணர்வை காவல்துறை போக்க வேண்டும். சந்தேகத்தின் பெயரில் அப்பாவிகள், வட மாநிலத் தொழிலாளர்கள் அடித்துக் கொல்லப்படும்  சம்பவத்தைத் தடுத்துநிறுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.