வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (11/05/2018)

கடைசி தொடர்பு:07:58 (11/05/2018)

பிரேதப் பரிசோதனையில் சடலத்தைத் தைக்கும் சலவைத் தொழிலாளி...! திருச்சியில் பரபரப்பு!

 
பிரேத பரிசோதனை

அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறையில் இறந்தவரின் உடலைச் சலவைத் தொழிலாளி ஒருவர் சாக்கு தைக்கும் ஊசியால் தைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு கிணற்றில் விழுந்து பலியான ஒருவரின் உடலின் பிரேதப் பரிசோதனை துறையூர் அரசு மருத்துவமனையில் நடந்தது. போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அந்த உடலை பிரேதப் பரிசோதனை அறையில் வைத்து பரிசோதனை செய்யப்பட்டது. ஆய்வுக்குப் பிறகு மருத்துவமனை பணியாளர் உடலைச் தைக்காமல், அந்த மருத்துவமனையில் ஒப்பந்த  அடிப்படையில் சலவைத் தொழில் செய்யும் தொழிலாளியான வாலீஸ்புரத்தைச் சேர்ந்த வீரமணி என்பவர்,   தைத்துள்ளார். அவருக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல், கையுறை மட்டும் அணிந்தபடி உடலை துணி மூட்டையைத் தைப்பதுபோல் தைக்கிறார். அப்போது மருத்துவமனை ஊழியர்கள் பணி செய்யாமல் அங்கு அரட்டையடிப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

இதை பிரேதப் பரிசோதனையில் இருந்த ஊழியர் ஒருவரே வீடியோ எடுத்துள்ளார். மேலும் பணி நேரத்தில் நோயாளிகளைக் கவனிக்காமல்  பணியாளர்கள் அரட்டையடிக்க, இறந்தவரின் உடலைச்  சலவைத் தொழிலாளியை வைத்துத் தைக்க வைப்பதா எனச் சர்ச்சை கிளம்பியுள்ளது.  இந்த வீடியோ சமூக வலைதளங்கள் வழியே வெளியாகப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து திருச்சி மருத்துவத்துறை இணை இயக்குநர் சம்ஷத்பேகம் துறையூர் அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகிறார்.  இதுகுறித்து அவர், "பிரேதப் பரிசோதனை அறையில் சலவைத் தொழிலாளி உடலைச் தைப்பது குறித்த விசாரணை தொடர்கிறது.  விசாரணை முடிவில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க