``உழவர் சந்தைக்குள் சந்தை போடுங்கள்..." கோரிக்கை வைக்கும் வேலாயுதம்பாளையம் மக்கள்!

 உழவர் சந்தை

`உழவர் சந்தைக்குள் சந்தைகளை நடத்த வேண்டும், வெளியே நடத்துவதால் பல பிரச்னைகள் ஏற்படுகிறது ' என்று கோரிக்கை வைக்கிறார்கள் வேலாயுதம்பாளையம் பேரூராட்சியைச் சேர்ந்த மக்கள்.
  
கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் இருக்கிறது வேலாயுதம்பாளையம் பேரூராட்சி. இந்தப்  பேரூராட்சியில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. ஆனால், உழவர் சந்தையை சரிவர  அதிகாரிகள் பராமரிக்காததால், வியாபாரிகள் சந்தைக்கு வெளியே சாலையை ஒட்டி கடைகள் போட்டு வியாபாரம் பார்க்கிறார்கள். இதனால், டிராபிக் பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படுவதாக மக்கள் குமுறுகின்றனர்.  

இதுகுறித்துப் பேசிய அப்பகுதி மக்கள்,  ``கரூர் மாவட்டம் வறட்சி மிகுந்த மாவட்டம் என்றாலும், வேலாயுதம்பாளையம் நல்ல செழிப்பான பகுதி. காரணம், காவிரி இந்தப்  பேரூராட்சியை ஒட்டிதான் ஓடுகிறது. அதனால், இங்கே வாழை, வெற்றிலை, காய்கறிகள், கீரைகள், தானியங்கள், பழங்கள்ன்னு பல்வேறு பயிர்கள் பயிரிடப்படுகின்றன. ஆனால், அவற்றைச்  சாலை ஓரம் அமர்ந்து விற்க வேண்டிய நிலை தான் இருக்கு. சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த உழவர் சந்தை நல்லா இயங்கிகிட்டு இருந்துச்சு. அதிகாரிகள் இதைச்  சரியா பராமரிக்கவில்லை. அதனால், வியாபாரிகளும் உழவர் சந்தைக்கு வெளியே அமர்ந்து வியாபாரம் பார்க்கிறார்கள். இதனால், போக்குவரத்து நெரிசல் ஆகிறது” என்றனர்.  

வியாபாரிகள், ``இந்தப்  பக்கம் அனாமத்தாக திரியும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் காய்கறிகள், கீரைகளை தின்னுபுடுது. அதை விரட்டுகிறதுக்குத்  தனி ஆள் போட வேண்டி இருக்கு. 'உழவர் சந்தையை பழையபடி ரெடி பண்ணித்  தாங்க. அங்கேயே அமர்ந்து நல்லா வியாபாரம் பார்க்கிறோம் 'ன்னு வேலாயுதம்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்துட்டோம். மாவட்ட நிர்வாகத்தையும் அணுகி கோரிக்கை வச்சு பார்த்துட்டோம். ஒண்ணும் நடக்கலை. நடையா நடந்து எங்க செருப்புகள் தேய்ந்ததுதான் மிச்சம். பேரூராட்சி அதிகாரிகள்,  'உழவர் சந்தையை ரிப்பேர் பார்க்கிறதுதான் எங்க வேலையா? எங்களுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு' ன்னு வெடுக்குன்னு கேட்கிறாங்க. உழவர் சந்தைக்கு விடிவுகாலம் பிறக்கலன்னா, போராட்டம்தான் " என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!