வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (11/05/2018)

கடைசி தொடர்பு:07:30 (11/05/2018)

``நிலத்தடி நீரை உறிஞ்சிட்டு, வேஷம் போடுகிறார்கள்" காகித ஆலைக்கு எதிராகக் கொந்தளிக்கும் மக்கள்!

 காகித ஆலையின் தண்ணீர் பந்தல்

``தமிழ்நாடு காகித ஆலை நிர்வாகம், ஆலைக்குள்ள ராட்சத போர்வெல்களைப் போட்டு  தண்ணீரை உறிஞ்சி நிலத்தடி நீரைப் பாழாக்கிட்டு, ஆங்காங்கே பேருந்து நிறுத்தத்தில் கேன் வாட்டர்களை வெச்சு தண்ணீர்ப் பந்தல் திறக்கிறது நியாயமா ?" என்று கேள்வி எழுப்புகிறார்கள் காகிதபுரத்தைச் சேர்ந்த மக்கள் .

கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்காவில்  உள்ள காகிதபுரத்தில் இயங்கிவருகிறது தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான காகித ஆலை . இந்த ஆலையைப்  பற்றி மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். காவிரியில் குடிநீருக்காக  திறந்துவிடப்பட்ட நீரை, எட்டு ராட்சத மோட்டார்களைப்  போட்டு மொத்தமாக உறிஞ்சி ஆலைக்குப்  பயன்படுத்துவதும், ஆலைக்குள்ளேயே அனுமதி இல்லாமல் 50-க்கும் மேற்பட்ட ராட்சத போர்வெல்களைப் போட்டு ஒட்டுமொத்த தண்ணியையும் உறிஞ்சி எடுக்கிறார்கள் என்பதுமே அந்த குற்றச்சாட்டுகள். .

இதுபற்றி பேசிய மக்கள்,  "ஆலையைச் சுற்றியுள்ள இருபது கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்துக்குப்  போய்விட்டது . அதிக வெப்பத்தோடு ஆலையில் இருந்து காற்றை வெளியேற்றுவதால், மழையும் பெய்வதில்லை. இப்படி தண்ணீரை பல வழிகளில் உறிஞ்சுவது போதாமல், கடந்த 20 நாள்களாக  300 டேங்கர் லாரிகளில் விவசாய கிணறுகள், போர்வெல்கள், கண்மாய்கள், குளம், குட்டையென்று சொற்பமா கிடக்கிற  நீர்நிலைகளில் உள்ள நீரையும் உறிஞ்சி எடுத்துவிட்டுப்  போய், ஆலைக்குப் பயன்படுத்துறாங்க. 

காவிரி பக்கத்தில்  இருந்தாலும், இந்த ஆலையால் நாங்க குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் திண்டாடுறோம். இப்படி இருபது கிராமங்களின் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து ஒண்ணுமில்லாம பண்ணிட்டு, டி.என்.பி.எல் நிறுவனம் வெளிவேஷம் போடுது. அதாவது, கரூர் கலெக்டர் அலுவலகம் எதிரே, மண்மங்கலம் அருகே,  ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்கள்ல வாட்டர் கேன்களை வெச்சு, தண்ணீர் பந்தல் திறந்து வேஷம் போடுது. எங்க பகுதி தண்ணீரையே ஒட்டுமொத்தமாக உறிஞ்சிவிட்டு, மக்களை ஏமாத்த  இப்படி கேன் வாட்டரை வெச்சுருக்காங்க. இதைக் கண்டிச்சு போராட இருக்கிறோம் " என்றார்கள் .
  
இதுகுறித்து டி .என் .பி .எல் ஆலைத் தரப்பில் பேசினால்,  "சட்டத்துக்கு உட்பட்டுதான்  நாங்கள் ஆலைக்கு  தண்ணீர் எடுக்கிறோம் . நிலத்தடி நீர்மட்டம் இந்தப்  பகுதியில் குறையக்  காரணம், கடும் வறட்சிதான் " என்கிறார்கள்.