வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (11/05/2018)

கடைசி தொடர்பு:08:00 (11/05/2018)

பள்ளிகளை மூட முயலும் தமிழக அரசின் முடிவுக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு!

ஆசிரியர் பணியிடங்களைக் குறைத்து, பள்ளிகளை மூட முயற்சிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

ஆசிரியர் முத்துப்பாண்டி

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையில்  31,393 அரசு தொடக்க நடுநிலைப் பள்ளிகளும், 6,597 அரசு நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளும் செயல்பட்டுவருகின்றன . இப்பள்ளிகளில் பெரும்பாலும் கிராமப்புற ஏழை மாணவர்களே பயின்று வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அவற்றில் பயிலும் மாணவர்கள், அருகில் உள்ள பள்ளிகளில் இணைப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சில தினங்களுக்கு முன்னால் அறிவித்தார். இது ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது . ,

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன்  பேசும் போது, "தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறது. சில தினங்களுக்கு முன், பள்ளிக்கல்வி இயக்குநர்  மேல்நிலைப் பள்ளியில் மாணவர் குறைவாக உள்ள பாடப் பிரிவுகளை நீக்குவதாக அறிவித்தார். தற்போது,  மாணவர்கள் குறைவாக  உள்ள பள்ளிகளின்  மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் இணைப்பதாக அறிவித்துள்ளார் . இதன்மூலம் கிராமப்புற மாணவர்களின் கல்வி கேள்விக்  குறியாகியுள்ளது . 

கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்படி குடியிருப்புகளிலிருந்து  1கி.மீ சுற்றளவுக்குத்  தொடக்கப் பள்ளிகளும், 3 கி.மீ. சுற்றளவுக்கு நடுநிலைப் பள்ளிகளும், 5கி.மீ சுற்றளவுக்கு உயர்நிலைப் பள்ளிகளும் அமைய வேண்டும் என்பது விதி. தற்போதைய அரசின் முடிவு, இச்சட்டத்தை மீறும் செயலாகும். மேலும், ஒரு பள்ளி தொடங்க வேண்டுமானால் 5 கி.மீ சுற்றளவில் உள்ள பள்ளிகளிலிருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும். ஆனால், தடையில்லாச் சான்று பெறாமலேயே பல அங்கீகாரம்  இல்லாத தனியார் பள்ளிகள் பெருகிவிட்டன. இப்பள்ளிகளின்மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, அரசுப்  பள்ளிகளை மூடுவது என்பது கிராமப்புறத்தில் உள்ள ஏழை, நடுத்தர, பொருளாதாரத்தில்  மிகவும் பிற்பட்ட குழந்தைகளின் கல்விக் கனவுகளைக்  குழிதோண்டிப்  புதைக்கும் செயலாகும். அங்கீகாரமில்லாமல் செயல்படும் பள்ளிகளை மூடினாலே, அரசுப்  பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை தானாகவே உயரும். 

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பால், 3, 500 -க்கும் மேற்பட்ட பள்ளிகளும், 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களும் பாதிக்கப்படுவதோடு, பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளை  மூடினால், எதிர்காலத்தில் அரசுப்  பள்ளிகளே இல்லாத நிலை ஏற்பட்டுவிடும்' என்றார் .

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க