குழந்தை கடத்தல் அச்சம்: மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநிலப் பெண்ணைத் தாக்கிய கிராம மக்கள்!

தனியாக மாட்டிக்கொண்ட சப் இன்ஸ்பெக்டர் பூமாலையை கிராம மக்கள் சிறைப்பிடித்தனர். பின்னர் வேப்பூர் போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று சப் இன்ஸ்பெக்டர் பூமாலையை மீட்டனர்

குழந்தை கடத்த வந்ததாக தாக்கப்பட்ட  வட மாநில பெண்  

விருத்தாசலம் அருகே உள்ளது காட்டுமைலூர் கிராமம். இந்தக்  கிராமத்தில், நேற்று இரவு வட மாநிலத்தைச்  சேர்ந்த மனநலம் பாதிக்கபட்ட பெண் ஒருவர் வந்துள்ளார். அவரை  குழந்தையைக் கடத்த வந்ததாக நினைத்து கிராம மக்கள் தாக்கியுள்ளனர். தகவலறிந்து  வேப்பூர் சப் இன்ஸ்பெக்டர் பூமாலை, தலைமைக்  காவலர் புண்ணியமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது, கிராம மக்களுக்கும் போலீஸாருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை செல்போனில் படம்பிடித்த ரவிவர்மன் என்பவரை போலீஸார் தாக்கியுள்ளனர். இதனால், அதிக அளவில் கிராம மக்கள் திரண்டுள்ளனர். அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால்,  தலைமைக்  காவலர் புண்ணியமூர்த்தி போலீஸ் ஜீப்பை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

தனியாக இருந்த  சப்-இன்ஸ்பெக்டர் பூமாலையை கிராம மக்கள் சிறைப்பிடித்தனர் . பின்னர், வேப்பூர் போலீஸார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று சப்-இன்ஸ்பெக்டர் பூமாலையை மீட்டனர். கிராம மக்கள் தாக்கியதில் காயமடைந்த வட மாநிலப் பெண், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  சிகிச்சை பெற்றுவருகிறார். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பூமாலை கொடுத்த புகாரின் பேரில், வேப்பூர் போலீஸார் காட்டுமைலூர்  கிராமத்தைச் சேர்ந்த பால்கருப்பை, ரவிவர்மன்,  ராயப்பன் (35), ராஜேந்திரன் (27), முருகன் (42), வேல்முருகன் (60), பன்னீர்செல்வம் (35), கருப்பையா, மகாலிங்கம், மூக்கன் ஆகிய 10 பேர்மீது வழக்குப் பதிவுசெய்து, ராயப்பன் உட்பட 8 பேரை கைதுசெய்தனர்.  ரவிவர்மன், பால்கருப்பை ஆகியோரைத் தேடிவருகின்றனர். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!