வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (11/05/2018)

கடைசி தொடர்பு:10:12 (11/05/2018)

"உங்க மாவட்டத்துலதான் மணல் கொள்ளை புகார் அதிகமா வருது” - அமைச்சரை வறுத்தெடுத்த முதல்வர்!

சமீபத்தில், மணல் கொள்ளைக்கு எதிராக உயர் நீதிமன்றம் கடுமையான தீர்ப்பை வழங்கியிருப்பதால், ஆளுங்கட்சி ஆடிப்போயிருக்கிறது என்கிறார்கள். இதன் உச்சமாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம், "உங்க மாவட்டத்துலதான் மணல் கொள்ளைபற்றி அடிக்கடி புகார் வருது. அதுக்குக் காரணமானவங்களை அடக்கிவையுங்க" என்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி இருக்கிறாராம்.

மணல்

தமிழகத்திலேயே அதிகமான மணல் கொள்ளை, கரூர் மாவட்டத்தில் ஓடும் காவிரி, அமராவதி ஆறுகளில்தான் நடப்பதாக இயற்கை ஆர்வலர்கள் புலம்பிவருகிறார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் முகிலன், இங்கு நடந்த மணல் கொள்ளையைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். பழ.நெடுமாறன், நல்லகண்ணு, வைகோ உள்ளிட்ட தலைவர்களை அழைத்துவந்து, மணல் மாஃபியாக்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார். ஆனால். எந்தக் கட்டுபாடுகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் அஞ்சாத மணல் மாஃபியாக்கள், பொக்லைன் இயந்திரங்களை வைத்து ஆயிரக்கணக்கான லாரிகளில் மணலை அள்ளி, ஆற்றில் களிமண் தெரியும் அளவிற்கு ஆறுகளைப் பாலைவனமாக்கிவிட்டதாக முகிலன் குமுறிவந்தார். இந்நிலையில், சமீபத்தில் உயர் நீதிமன்றம், 'இதுவரை நடந்த மணல் கொள்ளையை அதிகாரிகள் தடுக்காதது ஏன்? மணல் கடத்துபவர்கள்மீது குண்டர் சட்டம் பாய்ச்ச வேண்டும்; அதற்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் குண்டர் சட்டம் பாய்ச்சி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தமிழக அரசுக்கு ஏகப்பட்ட கிடுக்கிப்பிடி கேள்விகளைக் கேட்டு அதிர வைத்திருக்கிறது.

 

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு போன் வந்ததாம். போனில் பேசிய முதல்வர்,"மணல் கொள்ளைக்கு எதிராக நீதிமன்றம் கடுமையாக சாட்டையைச் சுழற்றியிருக்கிறது. தமிழகத்திலேயே அதிகமாக மணல் கொள்ளை பற்றிய புகார்கள் கரூரில் இருந்துதான் வருது. நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?. கோர்ட்டுக்கு இனி நாம பதில் சொல்ல முடியாது. அதனால், அங்க மணல் கடத்துபவர்களை அடக்கிவையுங்க. இனி அங்க இருந்து மணல் பற்றி எதுவும் புகார் வந்தா, நல்லா இருக்காது" என்று பேச, அமைச்சர் ஆடிப்போய் இருக்கிறாராம். உடனே, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை முடுக்கிவிட்டு, மணல் கடத்தலை முற்றிலும் ஒடுக்கும்படி கட்டளையிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதோடு, மணல் கொள்ளையில் ஈடுப்பட்ட ஆளுங்கட்சிப் புள்ளிகள் சிலரிடமே கடுமையாக சத்தம் போட்டாராம். இதுபற்றி, அமைச்சர் தரப்பில் பேசினோம்.  "எந்த போன்காலும் அண்ணனுக்கு வரலை. இவராகவே இங்கு மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்" என்றார்கள்.