வெளியிடப்பட்ட நேரம்: 10:08 (11/05/2018)

கடைசி தொடர்பு:10:42 (11/05/2018)

முதல்வர் வருகைக்கு எதிர்ப்பு - சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் சுற்றுச்சூழல் போராளி

கோவில்பட்டியில் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்க இன்று வருகைதரும் முதல்வர் பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் 8 கோரிக்கைகளை முன்வைத்தும், முகிலன் பாளையங்கோட்டை சிறையில் இன்று ஒருநாள் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

கோவில்பட்டியில் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கிவைக்க முதல்வர் பழனிசாமி இன்று வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், 8 கோரிக்கைகளை முன்வைத்தும் பாளையங்கோட்டை சிறையில் இன்று ஒருநாள் உண்ணாவிரதத்தை சுற்றுச்சூழல் போராளி முகிலன் தொடங்கியுள்ளார்.

முகிலன்தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன்,  தமிழகத்தில் ஆற்றுமணல் கொள்ளைத் தடுப்பு, காவிரி நதிநீர்ப் பாதுகாப்பு, கூடங்குளம் அணு உலைப் போராட்டம், மீத்தேன் எதிர்ப்பு, பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்களுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்பு எனப் பல போராட்டங்களில் கலந்துகொண்டு குரல் கொடுத்தவர். கடந்த 2017, செப்டம்பர் 18-ம் தேதி அணு உலை எதிர்ப்புப் போராட்டங்கள்குறித்த வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்றுடன்  236-வது நாளாக அடைக்கப்பட்டுள்ளார். 8 கோரிக்கைகளை முன்வைத்தும் முதல்வர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சிறையில் இன்று ஒருநாள் உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார்.

அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பின்வருமாறு, ``1. நிலம், நீர், காற்றை மாசுபடுத்தியும், நஞ்சைப் பரப்பியும் மக்களுக்கு பல்வேறு நோய்களைப் பரப்பியும் வரும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.

2. ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

3. மக்கள் உயிர் காக்கவும் எதிர்கால சந்ததிகள் நலன் காக்கவும் போராடி வரும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகள்மீது காவல்துறையினர்  போட்ட பொய் வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும்.

4. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், அதன் நிர்வாகி போலவும் செயல்பட்டுவரும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷை  இடமாற்றம் செய்ய வேண்டும்.

5. மணல் கொள்ளையர்களால் நாங்குநேரி காவல் ஜெகதீசுதுரை கொல்லப்பட்டதற்குக் காரணமான, தேசத்தின் சொத்தான ஆற்றுமணலை முறைகேடாகவும் சட்ட விரோதமாகவும் கொள்ளை அடிக்கப்படுவதைத் தடுக்காமல் அனுமதித்ததற்குப் பொறுப்பேற்று,பொதுப்பணித்துறை அமைச்சரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்.

6. தமிழக அமைச்சர்கள் முதல் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர்கள் வரை 33 ஆறுகளையும் பங்கு போட்டு சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடத்துவதை  தடுத்து நிறுத்திட வேண்டும்.

7. தமிழகத்தின் ஆற்றுமணல் முறைகேடாகக் கொள்ளை அடிக்கப்பட்ட பகுதிகளில், இதுவரை பொறுப்பில் இருந்த வருவாய்த்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுத்து, அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்.

8. தமிழ்நாட்டில் புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி கொடுக்காமல், வெளிநாட்டு மணலைத் தடைசெய்யாமல் இறக்குமதி செய்ய வேண்டும்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க