வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (11/05/2018)

கடைசி தொடர்பு:17:46 (11/05/2018)

காரில் மின்னல் வேகத்தில் சென்ற போதை டிரைவர்... பறிபோன 9 சுற்றுலாப் பயணிகளின் உயிர்கள்

பெரம்பலூர் அருகே, ஒரு கார்மீது மற்றொரு கார் மோதிய விபத்தில் சுற்றுலாப் பயணிகள் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ''டிரைவர் குடித்துவிட்டு அதிவேகமாகக் கார் ஒட்டியதே விபத்துக்கான காரணம்'' என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மோகன் என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர், வாடகை காரில் காஞ்சிபுரத்திலிருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்றுகொண்டிருந்தனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நான்கு ரோடு பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது,  எதிர் திசையில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த காரின் டயர் வெடித்துள்ளது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுப்பகுதியில் இருந்த தடுப்புச் சுவரில் மோதிப் பறந்து சென்று, எதிரே சென்ற காரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 9 பேர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தத் திடீர் சாலை விபத்தால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் படுகாயமடைந்த 2 பேர், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், டிரைவர் குடித்துவிட்டு ஓட்டியதாகத் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த பகுதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டுவருகிறார்.