புதுச்சேரி காலாப்பட்டு கலவரம் எதிரொலி; 144 தடை உத்தரவு அமல்

புதுச்சேரி காலாப்பட்டில் ஏற்பட்ட கலவர எதிரொலியாக, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கலவரம்

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டில், ’ஸ்ட்ரைடு ஷாசன்’ என்ற மருந்து மற்றும் மாத்திரைகள் செய்யும் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இந்தத் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்காக, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், அந்தத் தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதையடுத்து, அரசின் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்கும் கூட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. ஆனால், கடந்த 8-ம் தேதி நடக்க இருந்த கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், மாவட்ட ஆட்சியரும், மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் அங்கிருந்து வெளியேறினர்.

அப்போது, தொழிற்சாலைக்கு ஆதரவாகவும் எதிராகவும் திரண்ட இரு பிரிவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. கலவரத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசியது போலீஸ். இந்தச் சம்பவத்தில், போலீஸ்காரர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக காலாப்பட்டு பகுதி முழுவதுக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரியின் மாவட்ட ஆட்சியர் சத்யேந்திர சிங் துர்சாவத் பிறப்பித்த அந்த உத்தரவில், 'சுப நிகழ்ச்சிகள் மற்றும் இறப்பு ஊர்வலத்துக்கு மட்டும் 4 பேருக்கு மேல் செல்லலாம்' என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும், காலாப்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!