வெளியிடப்பட்ட நேரம்: 11:26 (11/05/2018)

கடைசி தொடர்பு:11:37 (11/05/2018)

`சாட்சிகளைக் கலைத்துவிடுவார்’ - நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

 பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை, ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்துள்ளது.  

 

நிர்மலா தேவி

 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணித உதவிப் பேராசிரியையாக இருந்தவர், நிர்மலாதேவி (50). இவர், மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக ஆடியோ ஒன்று கடந்த மாதம்  சமூக வலைதளங்களில் பரவி, பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், தமிழக ஆளுநர் பெயர் வரை சம்பந்தப்படுத்தி, அதிர்வுகளை உண்டாக்கியது. இந்த விவகாரத்தில் தனிவிசாரணை நடத்தவும் ஆளுநர் உடனடியாக உத்தரவிட்டார். தனியாக செய்தியாளர் சந்திப்பையும்  நடத்தினார்  ஆளுநர். இதன் தொடர்ச்சியாக, கல்லூரிச் செயலாளர் ராமசாமி (70), அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் 16.4.2018- ம் தேதி புகார் செய்தார். இதன் பேரில் மறுநாள் நிர்மலாதேவி கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

இவர் கொடுத்த தகவலின் பேரில், மதுரை ஒத்தக்கடை, திருமோகூர், சக்ராநகரைச் சேர்ந்த பேராசிரியர் முருகன் (42), திருச்சுழி, பன்னிமடை, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி (39) ஆகியோரையும் போலீஸார் கைதுசெய்தனர். தற்போது, மூவரும் மதுரை மத்திய சிறையில் உள்ளார்கள்.

முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி, ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை 3-ம் தேதி விசாரித்த விடுமுறை கால நீதிபதி சிங்கராஜ், மே 11-ம் தேதிக்கு  (இன்று)  தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், நிர்மலா தேவி தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணையும் இன்று  நடைபெற்றது. `நிர்மலா தேவி ஜாமீனில் வெளிவந்தால், சாட்சிகளைக் கலைத்துவிடுவார்’ என்று போலீஸ் தரப்பு நீதிமன்றத்தில் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம்   தள்ளுபடிசெய்யது உத்தரவிட்டுள்ளது.  கருப்பசாமி, முருகன் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை, 18 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க