வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (11/05/2018)

கடைசி தொடர்பு:12:15 (11/05/2018)

'காசை மிச்சம் புடிக்கிறீங்களா?'- துணிப்பையை வாங்க மறுக்கும் கஸ்டமரால் வேதனைப்படும் பெண்மணி

பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும் பொருட்டு வாடிக்கையாளர்களுக்கு துணிப் பைகளைக் கொடுத்தும், அவர்கள் அலுத்துக்கொள்வதாக வேதனையுடன் கூறுகிறார் ஜோதி.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ள வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர், ஜோதி. தனது கணவர் நடராஜனோடு சேர்ந்து, வேலாயுதம்பாளையத்தில் நியூ புக் ஸ்பாட்  என்ற ஸ்டேஷனரி பொருள்கள் அங்காடி மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்திவருகிறார். சமூக விசயத்தில் அதீத அக்கறைகொண்டவர்களான இந்தத் தம்பதியினர், பொதுப் பிரச்னைக்காக போராட்டம், காவிரிக்காகப் போராட்டம்  என நடத்துபவர்கள். இவர்கள், ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக பொருள்களை வழங்குகிறார்கள். இந்த பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் மிகுந்து காணப்பட்டதைக் கண்டு வேதனையுற்றனர். இதனால், பிளாஸ்டிக் கவர்களைத் தவிர்க்க முடிவெடுத்து, கடந்த 7 மாதங்களாக பிளாஸ்டிக் கவர்களுக்குப் பதில்  துணிப் பைகளை வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்துவருகிறார்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய ஜோதி, " அதிக பிளாஸ்டிக் பொருள்களும், பிளாஸ்டிக் கவர்களும் பயன்படுத்தும்போது ரோடு, வாய்க்கால், சாக்கடை நீர், வயல்கள்-னு எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பொருள்கள் நிறைஞ்சுருது. அதனால்,  பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்கிற விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்த நினைத்தோம். கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு , கஸ்டமர்களுக்கு துணி பைகளில் பொருள்களைப் போட்டுக் கொடுத்தோம். ஆனால், ஒருசிலரே அதை வரவேற்கிறார்கள். பல பேர், 'துணிப் பை ஏன் கொடுக்கிறீங்க? காசை மிச்சம் புடிக்கிறீங்களா... துணிப் பையில் பொருள்களை எடுத்துப் போக முடியலை. மழை சமயத்தில் நனைஞ்சா, பை கிழிஞ்சுபோயிடுது. பிளாஸ்டிக் கவர்ல கொடுத்தா, உங்க கடைக்கு வர்றோம். இல்லைனா, வரமாட்டோம்'ங்கிறாங்க. இருந்தாலும் வியாபார நோக்கம் தாண்டி, மக்களிடம் மெள்ள மெள்ள பிளாஸ்டிக்கின் தீமைகளை எப்படியும் உணர்த்திவிட முடியும் என்கிற நம்பிக்கையில் துணிப் பைகளையே கொடுத்துட்டிருக்கோம்" என்றார்.