வெளியிடப்பட்ட நேரம்: 11:58 (11/05/2018)

கடைசி தொடர்பு:19:50 (14/05/2018)

`கல்யாணம் பண்ணியது நான்தான்... விவாகரத்து செய்தது நண்பனை!' - போலீஸ் கமிஷனருக்கு வெளிநாட்டுப் பெண் அனுப்பிய விசித்திர புகார்

போலீஸ் கமிஷனருக்கு வந்த புகார்

சென்னை போலீஸ் கமிஷனருக்கு, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், இ-மெயிலில் புகார் அனுப்பியுள்ளார். அதன் பேரில், சென்னை தொழிலதிபரையும் அவரின் நண்பரையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர். 

 தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நார்மன் ஜெப்பை என்ற பெண்,  சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதனுக்கு   இ- மெயிலில் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.  அதில், ‘சென்னை சூளையைச் சேர்ந்த மனோஜ் ஜெயின் என்பவர், என்னை  திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார். அவரும் நானும் கடந்த ஆறு ஆண்டுகளாக, கணவன்- மனைவி போல வாழ்ந்தோம். அவர்மூலம் எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்,  என்னை தாய்லாந்தில் தவிக்கவிட்டு விட்டு சென்னைக்கு வந்துவிட்டார்.  எனவே, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். 

  தாய்லாந்து பெண்  நார்மன் ஜெப்பை தெரிவித்திருந்த இன்னொரு தகவல் அதிர்ச்சிகரமானது. அதாவது, 'மனோஜ் ஜெயினின்   நண்பரான விகாஸ் கோத்தாரி  என்பவர், என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.  அவர், சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர். எனவே, அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார். 

இந்தப் புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில், கூடுதல் கமிஷனர்  கணேசமூர்த்தி மேற்பார்வையில், பெண்களுக்கெதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் துணைக்கமிஷனர் ஷியாமளாதேவி தலைமையிலான மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,  "நார்மன் ஜெப், தாய்லாந்தில் துணி வியாபாரம் செய்துவருகிறார். கடந்த 2011-ம் ஆண்டு, அங்குள்ள கேளிக்கை விடுதிக்கு தொழிலதிபர் மனோஜ் ஜெயின் சென்றுள்ளார். அப்போதுதான் நார்மன் ஜெப்பும், மனோஜ் ஜெயினும் அறிமுகமாகியுள்ளனர். மது போதையில் மனோஜ் ஜெயின், நார்மனிடம் அநாகரிகமாக நடந்துள்ளார். அதற்கு மன்னிப்பு கேட்ட அவர், நார்மனைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, இருவரும் கணவன்- மனைவி போல வாழ்ந்துள்ளனர். அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர்  போன்ற நாடுகளுக்கு ஜாலியாகச் சென்றுள்ளனர் . இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தனர். பாங்காங்கில் உள்ள ரிஜிஸ்தர் அலுவலகத்தில் இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.

இதையடுத்து, மனோஜ் ஜெயினின் நண்பர்களான விகாஸ் கோத்தாரி, சந்தோஷ் ஆகியோர் தாய்லாந்துக்குச் சென்றுள்ளனர்.  அப்போது, விகாஸ்  கோத்தாரி, நார்மன் ஜெப்பையைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அதன்பிறகு வீட்டில் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால்,  மனோஜ் ஜெயின் சென்னைக்கு வந்துவிட்டார்.  அவரைத் தேடிய நார்மன் ஜெப், தாய்லாந்து போலீஸில் புகார் அளிக்க  திருமணச் சான்றிதழைப் பார்த்துள்ளார். அப்போதுதான், அந்தச் சான்றிதழில் கணவர் மனோஜ் ஜெயினுக்குப் பதிலாக அவரின் நண்பர் சந்தோஷ் கையெழுத்திட்டுள்ளது தெரியவந்தது. இந்த விவரம், கடந்த ஆண்டுதான் நார்மன் ஜெப்பைக்குத் தெரியவந்தது. இதையடுத்து, தாய்லாந்து கோர்ட்டில் மனு தாக்கல்செய்து சந்தோஷை விவாகரத்து செய்துள்ளார், நார்மன் ஜெப். 

தன்னை ஏமாற்றிய மனோஜ் ஜெயின் மற்றும் அவரின் நண்பர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்களுக்கு இ-மெயிலில் புகார் அனுப்பினார். அதன்பேரில் விசாரணை நடத்தி,  மனோஜ் ஜெயின், விகாஸ் கோத்தாரி இருவர் மீதும் 376 (கற்பழிப்பு), பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு - 4 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, கைதுசெய்துள்ளோம். விசாரணைக்குப் பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளோம். மேலும், தாய்லாந்துப் பெண்ணின் திருமண பதிவுச் சான்றிதழில் கணவன் போல கையெழுத்திட்ட மனோஜின் நண்பர் சந்தோஷையும் தேடிவருகிறோம்" என்றனர்.