'இன்னைக்குதான் பெருமைப்படுகிறேன்' - ஜப்பான் செல்லும் அரசுப் பள்ளி மாணவனின் தாய் பெருமிதம்

மாணவர்  ஹரிஹரன்

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாமல் கல்வாழையை கொண்டு தான் கண்டுபிடித்த கழிவறைக்காக ஜப்பான் செல்லும் வாய்ப்பை பெற்றார் கரூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர் ஹரிஹரன். "கரூரை இதுவரை தாண்டாத என் மகன் இன்னைக்கு ஜப்பான் செல்கிறான். என் வயித்துல அவனை பெத்ததுக்கு பெருமைப்படுகிறேன்" என்று அவரது தாய் பெருமிதமாக சொல்கிறார்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது வெள்ளியணை. இந்தக் கிராமத்தில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஹரிஹரன்தான் அந்த ஜப்பான் செல்லும் மாணவன். இந்தப் பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் தனபாலின் வழிகாட்டுதலோடு, இவர் கல்வாழையில் சூழலைப் பாதிக்காக கழிவறையை கண்டுபிடித்தார். அந்தக் கண்டுபிடிப்புக்காகதான் ஜப்பான் செல்கிறார். பள்ளிக் கல்வித்துறை, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் அறிவியல் பாடத்தில் ஜப்பான், ஆசியா மாணவர்களின் பரிமாற்றம் திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல் கண்டுப்பிடிப்பு திறனை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழக அளவில் 6 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வரும் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ஜப்பானுக்கு அழைத்து செல்லப்பட இருக்கிறார்கள். 


 

அங்கே வரும் கம்போடியா, மியான்மர் நாட்டு மாணவர்களுடன், இந்திய மாணவர்கள் (பீகார், கோவா, குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, தமிழ்நாடு) இணைந்து ஜப்பான் நாட்டின் பல்வேறு அறியல் தொழில்நுட்பம் சார்ந்த இடங்களைப் பார்வையிட இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து, ஜப்பான் நாட்டின் தலைச்சிறந்த விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி, அறிவியல் தகவல்களைப் பெற இருக்கிறார்கள். தமிழ்நாடு சார்பாக ஜப்பான் செல்லும் மாணவர்களில் ஒருவராகதான் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் தேர்வாகியுள்ளார். ஹரிஹரனை ஜப்பான் அனுப்புவதற்காக, அவரின் தாய் கண்ணம்மாள், வழிகாட்டி ஆசிரியர் தனபால், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கருப்பண்ணன் ஆகியோர் சகிதம் நேற்று இரவே டெல்லி நோக்கி ஹரிஹரன் ரயிலில் பயணிக்கிறார்.

இந்நிலையில், ஹரிஹரனின் தாய் கண்ணம்மாள், "என் மகன் இதுவரை கரூரைத் தாண்டியதில்லை. முதல்முறையாக ஜப்பான் போறான். எல்லாரும் என் மகனை பாராட்டுறாங்க. அதைக்கேட்டு பெத்த வயிறு குளிர்ந்து போச்சு. பெருமையில் பூரிச்சுப் போயிருக்கிறேன். இவனை பெத்ததுக்கு இன்னைக்குதான் பெருமைப்படுகிறேன்" என்றார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!