கிரண்பேடி உரையைத் தமிழில் மொழி பெயர்த்த நாராயணசாமி; புதுச்சேரியில் அதிர்ந்த விழா அரங்கம்

அரசு விழா ஒன்றில் ஆளுநர் கிரண்பேடியின் உரையை முதல்வர் நாராயணசாமி தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.

ஆளுநர்

புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் 53 வது ஆண்டு கம்பன் கலை விழா இன்று தொடங்கியது. இந்த விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய ஆளுநர் கிரண்பேடி தனது உரையைத் தமிழில் மொழி பெயர்க்க கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனை அழைத்தார். அதற்கு “என்னால் முடிந்தவரை மொழி பெயர்ப்பு செய்கிறேன்” என்று அவர் கூறினார். உடனே சற்றும் தாமதிக்காத கிரண்பேடி முதல்வர் நாராயணசாமியை மொழி பெயர்ப்பு செய்ய அழைக்க, கைதட்டலால் அதிர்ந்தது அரங்கம். முதல்வரும் மொழி பெயர்ப்பு செய்ய ஆரம்பித்தார்.

அப்போது, ``அடுத்த 10 நிமிடத்துக்கு நான் உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன்” என்று கிரண்பேடி சொல்ல, “நானும் அதையே கூறுகிறேன்” என்று சொன்னார் முதல்வர் நாராயணசாமி. அதற்கு, “இந்த நட்புக் காலம் முழுவதும் தொடர வேண்டும் என நான் நினைக்கிறேன்” என்று பதிலளித்தார் கிரண்பேடி. அதைத் தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடி சுமார் 15 நிமிடங்கள் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையைத் தமிழில் மொழி பெயர்த்தார் முதல்வர் நாராயணசாமி. துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க முதல்வர் மொழி பெயர்ப்பு செய்த நிகழ்வை அங்கிருந்த மக்கள் கைதட்டி வரவேற்றனர். அதே சமயம் இந்த விவகாரம் குறித்து ஆதரவு, எதிர்ப்பு என இருவேறு கருத்துகளும் எழுந்திருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!