வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (11/05/2018)

கடைசி தொடர்பு:15:15 (11/05/2018)

சாலையோரத்தில் குவிக்கப்பட்ட ஸ்டெர்லைட் கழிவுகள்: அச்சத்தில் 2 மாவட்ட மக்கள்

ஸ்டெர்லைட் ஆலையின் அபாயகரமான கழிவுகளை தூத்துக்குடி-நெல்லை சாலையின் ஓரத்தில் ஆலை நிர்வாகம் குவித்து வைத்திருப்பதால், சுற்றுசூழல் பாதிக்கப்படுவதுடன் நீர் நிலைகளும் மாசுபடும் ஆபத்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையின் அபாயகரமான கழிவுகளை தூத்துக்குடி-நெல்லை சாலையின் ஓரத்தில் ஆலை நிர்வாகம் குவித்துவைத்திருப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் நீர்நிலைகளும் மாசுபடும் ஆபத்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட்

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு, மாவட்டம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.  ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களும் ஏற்படுவதாக தூத்துக்குடி மக்கள் குற்றம் சாட்டிவரும் நிலையில், ஆலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் அதிருப்தி அடைந்த மக்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதால் ஆலைக்கான அனுமதியை தமிழக அரசு நிறுத்திவைத்திருக்கிறது. 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, ஆலைக்கு அருகில் இருக்கும் அ.குமரெட்டியாபுரம் மக்கள்          88-வது நாளாக போராட்டம் நடத்திவருகிறார்கள். அந்த மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, பண்டாரம்பட்டி, சங்கரபேரி, மீளவிட்டான், உள்ளிட்ட 19 இடங்களில் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. 

இந்த நிலையில், நெல்லைக்குச் செல்லும் சாலை ஓரத்தில் கொட்டிக்கிடக்கும் மணல் மேடுகள் அனைத்தும் ஸ்டெர்லைட் ஆலையின் அபாயகரமான கழிவுகள் என்கிற விவரம் பொதுமக்களுக்குத் தெரிய வந்திருப்பதால், மிகுந்த அச்சமும் வேதனையும் அடைந்துள்ளனர். அந்தக் கழிவுகள், மழைநீர் செல்லும் வழியில் கொட்டிக் கிடப்பதால், மழை பெய்ததும்  அவை அனைத்தும் நீரில் கலந்து குளங்களுக்குச் செல்கின்றன.

ஸ்டெர்லைட்

இதுபற்றி நம்மிடம் பேசிய சமூக ஆர்வலரான முத்துராமன், ’’நெல்லை-தூத்துக்குடி சாலையின் ஓரமாக, கடந்த இரண்டு வருடங்களாக மண் குவியல் கிடப்பதைப் பார்த்திருக்கிறேன். ரியல் எஸ்டேட்காரர்கள், நிலத்தைச் சமப்படுத்தி உயரமாக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக நினைத்துவிட்டேன். பெரும்பாலான பொதுமக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் கொட்டிக் கிடக்கும் அனைத்துமே ஸ்டெர்லைட் ஆலையின் அபாயகரமான கழிவுகள் என்பதை அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. அத்துடன், கழிவுகள் கொட்டப்பட்ட இடம் உப்பாற்று ஓடை.. மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய காப்பர் கழிவுகளை எந்தக் கவலையும் இல்லாமல் நீர் வழிப்பாதையில் கொட்டி வைத்திருப்பது ஆபத்தானது. 1989-ம் ஆண்டின் அபாயகரமான கழிவுகள், மேலாண்மை மற்றும் கையாளுதல் விதி 5-ன் கீழ் ஆலை நிர்வாகம் அனுமதிபெற்றிருக்க வேண்டும். அந்தக் கழிவுகளை எப்படிக் கையாளப்போகிறது என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டி அனுமதி பெற்று செயல்படவேண்டிய நிலையில், யாரிடமும் கேட்காமல் தனது இஷ்டப்படி நீர் வழிகளில் கொட்டியிருக்கிறார்கள்.

இதனால், நிலத்தடி நீர் மாசுபடும். அத்துடன், கழிவுகள் மழையில் கரைந்து நீரில் கலந்து குளம் மற்றும் ஆறு ஆகியவற்றில் கலந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. 1974-ம் ஆண்டு, நீர் மாசுத் தடுப்புச் சட்டம் 24-ன் கீழ் ஆலை நிர்வாகம் தவறுசெய்திருக்கிறது. அதனால், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைவர், இயக்குநர் உள்ளிட்ட அனைவர் மீதும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பல வருடங்களாக இந்தத் தவறு நடந்துள்ளபோதிலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததன் காரணம் என்ன?’’ எனக் கேள்வி எழுப்பினார்.