Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பின் நின்று அல்ல; பெரியார் உடனே போராட்டத்தில் பயணித்த நாகம்மையார் #NagammaiMemories

நாகம்மையார்

'ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார்' எனும் மேற்கோளைப் பல இடங்களில் கேட்டிருக்கலாம். ஆனால், பின்நிற்பதாகச் சொல்லப்படும் பெண்ணையும் இணைத்து இணையாகப் பயணிப்பதே சரியானது. அதைத்தான் பெரியார் செய்தார். அவரின் சக பயணிதான், நாகம்மை. தொண்டர்களுக்கு நாகம்மையார். பெரியாரின் மனைவி எனப் பொதுவாக இவரைப் பற்றித் தெரியும் அடையாளம். ஆனால், பெரியாரியம் உருவாக்கிய மகத்தான பெண்களில் முதன்மையானவர் நாகம்மையார். பகுத்தறிவு சமூகத்துக்காகப் பெருமளவில் தம் உழைப்பைச் செலுத்தியிருக்கிறார். அவர் குறித்த சுருக்கமான அறிமுகம். 

1885-ம் ஆண்டு, சேலம் மாவட்டம், தாதம்பட்டியில் பிறந்தவர், நாகம்மையார். பெரியாருக்கு முறைப்பெண். ஆயினும், வசதி குறைவான குடும்பம் என்பதால், ஏற்கெனவே மணமான ஒருவருக்கு நாகம்மையை திருமணம் செய்ய முடிவுசெய்தனர். நாகம்மையோ, பெரியாரைத்தான் மணம் முடிப்பேன்; இல்லையேல் தற்கொலை செய்துகொள்வேன்' என உறுதியாக இருந்தார். பெரியாருக்கோ வசதி படைத்த வேறிடத்தில் பெண் பார்க்கும் படலம் தொடங்கியிருந்தது. உடனே பெரியார், 'நாகம்மாளைத்தான் மணப்பேன்' என மறுக்கமுடியாத தன்மையில் கூறிவிட்டார். மணமொத்த இருவரின் திருமணம் 1898-ம் ஆண்டு நடந்தது. 

சடங்கு முறைகளில் நம்பிக்கைக்கொண்டது பெரியாரின் குடும்பம். ஆனால், சடங்குகளின் அடிப்படையைக் கேள்வி எழுப்பும் நபராக பெரியார் இருந்தார். இந்தக் குணத்தை மெள்ள மெள்ள நாகம்மைக்கும் வரச் செய்தார். ஏழை, பணக்காரர் எனும் பேதம் பார்க்கும் குணம் எப்போதுமே இருந்ததில்லை. பெரும் வணிகக் குடும்பத்தில் இருந்ததால், பட்டாடை உடுத்தியிருந்த நாகம்மை, ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியார் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியதும் தானும் இணைந்துகொண்டார். உடலை உறுத்தாத கதராடைக்கு மாறினார்.

நாகம்மையின் குணங்களில் பலராலும் குறிப்பிடப்படுவது, விருந்தோம்பல். நள்ளிரவுக்குத் தொண்டர்களோடு வந்தாலும், இன்முகத்துடன் உணவு உபரிப்பார். பெரியார் உணவு விஷயத்தில் சிக்கனம் காட்ட நினைப்பவர். அதனால், நெய் போன்றவற்றைத் தவிர்க்கச் சொல்வார். நாகம்மையோ, பெரியாருக்கு மட்டும் தவிர்த்து மற்றவர்க்குத் தருவார்.

1921-ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது கள்ளுக்கடை மறியலை முன்னெடுத்தார் பெரியார். தன் தோப்பில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். போராட்டம் தீவிரமானதை உணர்ந்த வெள்ளையர் அரசு, தடை உத்தரவு போட்டது. அதையும் மீறி, போராடி சிறை சென்றார் பெரியார். ஆயினும், போராட்டம் தொடந்தது. நாகம்மையும் பெரியாரின் சகோதரி கண்ணம்மாளும் போராட்டத்தை முன்னெடுத்தனர். பெண்கள் செல்லவே துணியாத கள்ளுக்கடைப் பகுதியில் தொண்டர்களோடு போராட்டம் நடத்தினர். ஏராளமான பெண்கள் இவர்களின் பின்னால் அணிவகுத்தனர். இந்திய அளவில் பேசக்கூடிய போராட்டமாக அது அமைந்தது. கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்தச்சொல்லி காந்தியிடம் சிலர் கேட்டபோது, "மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டில் இரண்டு பெண்களிடம் இருக்கிறது. அவர்களைத்தான் கேட்க வேண்டும்" என்றார். இதிலிருந்தே இவர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் தீவிரத்தை நாம் உணரலாம். 'பெரியார் பேச்சோடு நில்லாமல், தம் வீட்டுப் பெண்களை மறியல் செய்யவைத்தார். இதைக் கேட்ட தமிழகமே அதிசயத்தது' என வியந்து கூறினார் காமராஜர்.

நாகம்மையார்

கேரளாவில் தாழ்த்தப்பட்ட மக்களைத் தெருவுக்குள் அனுமதிக்காததை எதிர்த்த, பெரியாரின் வைக்கம் போராட்டம் பலரும் அறிந்ததே. அதில், நாகம்மை உள்ளிட்ட பெண்களின் பங்களிப்பும் இருந்தது. கண்ணம்மாள் உள்ளிட்ட 5 பெண்களுடன் வைக்கம் தெருவுக்குள் நுழைந்தார் நாகம்மை. 'எந்த சாதி?' என போஸீஸ் கேட்க, 'சாதி பார்த்து அனுமதிப்பதும் மறுப்பதும் கூடாது. அனைவரையும் அனுமதிக்க வேண்டும்' எனத் தீர்க்கமாகப் பேசினார் நாகம்மை. அதுவரை போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஆண்கள் மீதே நடவடிக்கை எடுத்த காவலர்கள், இவர்களை என்ன செய்வது எனக் குழம்பினர். ஆண்களுக்கான நடவடிக்கையே இவர்கள் மீதும் பாய்ந்தது. இறுதியில், வைக்கம் போராட்டம் மகத்தான வெற்றிபெற்றது.

பெரியாரின் பணிகளில் உற்ற தோழர்போல பயணித்தவர், நாகம்மை. பெரியார் சுற்றுப்பயணத்தில் இருக்கும்போதெல்லாம் 'குடியரசு' பத்திரிகையின் பொறுப்புகளை ஏற்றுச் சிறப்பாக நடத்தினார். மூடநம்பிக்கை கருத்துகளும் பழக்கவழக்கங்களும் பரவிக்கிடந்த அந்தக் காலத்தில், அதற்கு எதிராகக் குரல் கொடுப்பது எளிதானது அல்ல. நாகம்மை துணிவோடு அந்தப் பணியைச் செய்தார். 1929-ம் ஆண்டுகளில் சாதி மறுப்பு மற்றும் விதவைத் திருமணங்கள் பலவும் நாகம்மை தலைமையில் நடைபெற்றுள்ளது.

பள்ளிக்கே சென்றிராத நாகம்மை, சமூகச் சீர்திருத்த கருத்தில் உறுதியாக இருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் சமூக சமத்துவத்துக்காக உழைத்த நாகம்மையின் உயிர், 1933 மே 11-ம் நாள் நீங்கியது. அவரின் இழப்பைப் பற்றி, 'நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய, தனக்காக அல்ல என்பதை நன்றாக உணர்ந்தேன். இவற்றுக்கு நான் கூறும் சிறிய சமாதானம், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும், பொதுநலச் சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநலக் காரியங்களுக்கும், சுயமரியாதை இயக்கத்துக்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான்" எனக் குறிப்பிட்டார் பெரியார்

நாகம்மையின் சமூகப் பணியின் நினைவாக, 'நாகம்மையார் இல்லம்' என்ற பெயரில், ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான இல்லம், தந்தை பெரியாரால் 1959-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 

நன்றி: 'அன்னை நாகம்மையாரும் தோழர் கண்ணம்மாளும்' நூல் (கருப்புப் பிரதிகள் வெளியீடு, சென்னை)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement