வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (11/05/2018)

கடைசி தொடர்பு:15:50 (11/05/2018)

குழந்தை கடத்தல் வதந்தி எதிரொலி… வடமாநிலத்தவர் கணக்கெடுக்கும் பணி தீவிரம்!

குழந்தை கடத்தும் வடமாநில கும்பல் என வாட்ஸ்அப்பில் வதந்தி பரவிவருவதன் எதிரொலியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே குழந்தைகளைக் கடத்தும் கும்பல் திரிவதாகச் சமூக வலைதளங்களில் வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் சந்தேகப்படுபவர்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் நடந்துவருகின்றன.

காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி, குழந்தை கடத்தல்

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த அத்திமூர் பகுதியில் குலதெய்வம் கோயிலுக்குச் சென்றவர்களை, குழந்தை கடத்த முயன்றதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தாக்கியதில் மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை குழந்தையைக் கடத்த வந்ததாகக் கருதி அப்பகுதி மக்கள் உருட்டுக்கட்டைகளால் அடித்துக் கொலை செய்துள்ளனர். மேலும் சந்தேகப்படும் வடமாநிலத்தவரை கட்டிவைத்து அடிப்பது எனச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறையினர் ஆட்டோக்கள் மூலம் விழிப்பு உணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, “சமீப காலமாக வாட்ஸ்அப்பில் வடமாநிலத்தவர் குழந்தை கடத்த வந்துள்ளதாக வதந்தி பரவிவருகிறது. இத்தகைய வதந்தியைப் பரப்புவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடமாடும் அப்பாவிகளைக் கடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் சந்தேகத்துடன் தாக்குவது சமீபகாலமாக ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதனால் அவர்கள் பலத்த காயமடைந்து உயிர்ச் சேதம் ஏற்படக் கூடிய நிலைக்கு ஆளாகின்றனர்.

கடந்த 29-ம் தேதி, காஞ்சிபுரம் அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் சின்னையன்சத்திரம் பகுதியில் வடமாநில இளைஞன் ஒருவரை அப்பகுதி மக்கள் அடித்துக் கொலை செய்தார்கள் அதேபோல் கடந்த 6-ம் தேதி ஒரே நாள் இரவில் மட்டும், தாயார் அம்மன் குளம் மற்றும் பிள்ளையார் பாளையம் ஆகிய இரண்டு இடங்களில், வடமாநிலத்தவர் மீதும் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மீதும் தாக்குதல் நடந்து உள்ளது. இதுபோன்ற செயலால் அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. தாக்குதல் நடத்தும் பொதுமக்களும் சட்டபூர்வ நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். எனவே பொதுமக்கள், தங்கள் ஊருக்குள் வரும் புதிய நபர்கள் மீது சந்தேகம் இருப்பின், அருகில் உள்ள காவல் நிலையத்துக்கோ அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ புகார் கொடுக்கலாம். தமிழகத்துக்கு வேலைக்கு வந்திருக்கும் வடமாநிலத்தவரை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது. தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்ட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்” என எச்சரிக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க