வெளியிடப்பட்ட நேரம்: 14:36 (11/05/2018)

கடைசி தொடர்பு:17:07 (11/05/2018)

பி.இ விண்ணப்பக் கட்டண விவகாரம்: அடுத்தடுத்து பல்டி அடித்த அண்ணா பல்கலைக்கழகம்!

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பக் கட்டண விவகாரத்தில், அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து மாணவர்களைக் குழப்பிவருகிறது.

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை, கலந்தாய்வுமூலம் நிரப்பப்படுகிறது. தமிழகத்தில், மொத்தம் உள்ள 2 லட்சத்து 60 ஆயிரம் பொறியியல் காலி இடங்களில், 1 லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது. இந்த வருடம்  முதல், ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்கு, ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதன் கட்டணத்தையும் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. 

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு, நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைன்மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணத்தை     பே-ஆர்டர் மற்றும் டி.டி மூலமாகச் செலுத்தலாம் எனக் கூறினார். மேலும், கிராமப்புற மாணவர்களின் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்வதற்கு 42 இடங்களில் இ-சேவை மையம் அமைக்கப்பட்டு 30 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்' என்றும் தெரிவித்துள்ளார். 

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை மீண்டும் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது, டி.டி, பே-ஆர்டர் மூலம் பணம் செலுத்துவதில் சிக்கல் உள்ளதால், அதை அனுமதிக்க முடியாது என்றும் அதற்குப் பதில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ''விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் மாணவர்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படக் கூடாது. எளிதாக எப்படி கட்டணம் செலுத்த முடியும் என்பதை நாளை(11-05-18) நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்'' என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, இன்று நடைபெற்ற இது தொடர்பான விசாரணையில், டிடி மூலமே விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம் எனக் கூறியுள்ளது. இது, மாணவர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பொறியியல் படிப்புக்கு விண்ணபிக்க மே 30-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான விண்ணப்பக் கட்டணத்தை எப்படிச் செலுத்துவது என்பது தெரியாமல் மாணவர்கள் தவித்துவருகின்றனர்.