வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (11/05/2018)

கடைசி தொடர்பு:16:10 (11/05/2018)

வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்

செய்யாறு சுற்றுவட்டாரப் பகுதியில், ஒரே நாளில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டது என ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பொய்யான தகவலை வீடியோவாகப் பேசி அதை பரப்பிய வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

போலி தகவல் பரப்பிய இளைஞர்

திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில். வடமாநிலத்தவர், குழந்தை கடத்துவதாகக் கூறி ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பொய்யான தகவல் வதந்தியாகப் பரவி வருகிறது. இந்த வதந்தியை உண்மை என்று நம்பி இதுவரை மூன்று பேரை அடித்துக் கொலை செய்துள்ளனர் பொதுமக்கள். அதோடு 50-க்கும் மேற்பட்டவர்களைச் சந்தேகத்தின் அடிப்படையில் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த வதந்தியால் போலீஸுக்குப் பெரும் தலைவலி ஏற்பட்டது. இந்த வதந்தியை நம்பாதீர்கள் என்று பொதுமக்களுக்குக் காவல் நிலையங்கள் மூலம் கிராமம் கிராமமாகச் சென்று விழிப்பு உணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டன என்று கூறி பொய்யான தகவலை, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பரப்பி வந்த புரிசை கிராமத்தைச் சேர்ந்த வீரராகவன் என்பவரை போலீஸ் கைது செய்துள்ளது. ஃபேஸ்புக்கில் அவரே செல்ஃபி வீடியோவாகப் பேசி அதை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை உண்மை என்று நம்பி 52,000 பேர் ஷேர் செய்துள்ளனர். 2 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதே போல் வாட்ஸ் அப் குரூப்பில் ஷேர் செய்துள்ளார். இந்தப் பொய்யான தகவல் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் வதந்தியாகப் பரவியுள்ளது. இந்த வதந்தியைத் தடுக்க சில ஆர்வலர்கள் அந்த வீடியோவை திருவண்ணாமலை எஸ்.பி பொன்னிக்கு அனுப்பி வைத்தனர். எஸ்.பி உத்தரவின் பேரில் செய்யாறு அனக்காவூர் போலீஸ், வீரராகவனை கைது செய்து அவர்மீது  சமூக வலைதளங்களில் தவறான தகவலைப் பரப்பியதற்கு 507 என்ற பிரிவிலும், பொது அமைதிக்கு கேடு உண்டாக்கும் வகையில் வதந்தியைப் பரப்பியதற்கு 505 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் வெளியிட்ட வீடியோவை அழிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர் போலீஸ்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க