வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (11/05/2018)

கடைசி தொடர்பு:16:25 (11/05/2018)

கிராமத்தில் நடந்த தேர்தலில் இருதரப்பினர் மோதல்! களேபரமான மீனவப் பகுதி

பங்கு பேரவைத் தேர்தல் சம்பந்தமாகச் சின்ன முட்டம் மீனவர் கிராமத்தில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ங்கு பேரவைத் தேர்தல் சம்பந்தமாகச் சின்ன முட்டம் மீனவர் கிராமத்தில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சின்னமுட்டம் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீனவ கிராமத்தில் சர்ச் பங்கு பேரவைத் தேர்தல் நேற்று நடந்தது. இதில் ஏற்கெனவே பதவியில் இருந்துவரும் சில்வெஸ்டர் அணி மீண்டும் வெற்றிபெற்றது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சௌந்தர்ராஜன் அணி தோல்வியடைந்தது. இதையடுத்து சில்வெஸ்டர் அணியில் கணக்கராக வெற்றிபெற்றவர் 3-ம் வகுப்புவரை படித்திருப்பதாகவும் கணக்கு வழக்குபார்ப்பவர் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் சௌந்தர்ராஜன் தரப்பினர் குரல் கொடுத்திருக்கிறார்கள். இதனால் இரண்டு அணியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்தது. நேற்று இரவில் இரண்டு கோஷ்டியினரும் கம்பாலும் கற்களாலும் மாறிமாறி தாக்கியுள்ளனர். இதில், 13 பேர் காயம் அடைந்தனர். 10 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோதலை அடுத்து  சின்னமுட்டத்தில் அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டனர். எஸ்.பி ஸ்ரீநாத் சின்னமுட்டத்தில் மோதல் நடந்த பகுதியைப் பார்வையிட்டார். இதையடுத்து சௌந்தர்ராஜன் மற்றும் அவரின் கோஷ்டியைச் சேர்ந்த 50 பேர் மீதும், சில்வெஸ்டர் மற்றும் அவரின் கோஷ்டியைச் சேர்ந்த 20 பேர் என மொத்தம் 70 பேர்மீது கன்னியாகுமரி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், மோதல் ஏற்படாமல் இருக்க சின்னமுட்டம் கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சௌந்தர்ராஜன் கோஷ்டியைச் சேர்ந்த சேகர், கனிஸ்கர், சிலுவை உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.