வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (11/05/2018)

கடைசி தொடர்பு:16:40 (11/05/2018)

`கண்காட்சி போலவே இல்லை'- பார்வையிட்ட பொதுமக்கள் வேதனை

நீலகிரி மாவட்டம் கூடலூரில், தோட்டக்கலைத் துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தொடங்கிய வாசனைப் பொருள்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த 20 அரங்குகளில் ஓரிரு அரங்குகள் மட்டுமே வாசனைப் பொருள்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை ஏமாற்றமடையச் செய்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் கோடை விழா மற்றும் 8வது வாசனைப் பொருள்கள் கண்காட்சி இன்று தொடங்கியது.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி இணையத் தலைவர் மில்லர் ஆகியோர் கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். கண்காட்சியில் தோட்டக்கலைத் துறை சார்பில் அமைக்கப்பட்ட சென்னையில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டத்தின் மாதிரி வடிவம் முழுக்க முழுக்க குருமிளகு, ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை, சோம்பு, மல்லி, சீரகம், வெந்தையம், மிளகாய் விதை, கசகசா, ஜாதிபத்திரி, ஸ்டார் அனீஸ், கருஞ்சீரகம் உள்ளிட்ட 14 வகையான  வாசனைத் திரவியப் பொருள்களால் 13 அடி நீளம், 5 அடி அகலம், 9 அடி உயரம் கொண்ட சுமார் 300 கிலோ எடையில் அமைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களைக் கவர்ந்தது.

இது குறித்து கண்காட்சியைப் பார்வையிட வந்த பொதுமக்கள் கூறுகையில், ``தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அதிகாரிகள், ஒதுக்கப்படும் நிதியை கணக்குக் காண்பிப்பதற்காக ஏதோ கண்காட்சி என்ற பெயரில் ஆண்டு தோறும் ஏற்பாடு செய்கின்றனர்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள சுமார் 20 அரங்குகளில் 2 அரங்குகளில் கூட வாசனைத் திரவியப் பொருள்களை பிரபலப்படுத்தும் வகையிலோ அல்லது அப்பொருள்களை விளைவிப்பது குறித்து விளக்கும் வகையிலோ அமைக்கப்படாதது வருத்தமளிக்கும் விதமாகவுள்ளது. வனத்துறைக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரங்கு மிகவும் தத்ரூபமாக அமைந்திருந்தது பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தது. மேலும், கண்காட்சி அரங்கம் அமைந்துள்ள மைதானம் நேற்று பெய்த மழையால் சேறும் சகதியுமாகக் காணப்பட்டது. இது வாசனைத் திரவியப் பொருள்கள் கண்காட்சியைப் போலவே இல்லை. ஏதோ திருவிழாவுக்காக அமைக்கப்பட்ட மரணக் கிணறும், ராட்டினமும் அடுத்த இரண்டு நாள்களுக்குக் கண்காட்சியின் ஒரு பகுதியாகக் கயிறு இழுத்தல் போட்டியும், வழுக்கு மரம் ஏறுதலும், நாய்க் கண்காட்சியும்தான் கண்காட்சி போல” என்று ஆதங்கப்பட்டனர்.
 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க