வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (11/05/2018)

கடைசி தொடர்பு:15:33 (11/05/2018)

``அது என்னிடம்தான் இருக்கிறது!" சந்தானத்தின் பதில்... தொடரும் நிர்மலா தேவி சர்ச்சை!

``அது என்னிடம்தான் இருக்கிறது!

ல்லூரி மாணவிகளிடம் தவறான முறையில் பேசியது தொடர்பான வழக்கில் அருப்புக்கோட்டை கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தற்போது மீண்டும் பரபரப்படைந்துள்ளது. அருப்புக்கோட்டை காவியன் நகரிலுள்ள நிர்மலா தேவியின் வீட்டிலிருந்து பல ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

நிர்மலாதேவி வீட்டின் பூட்டு, கடந்த 9- ம் தேதி காலை உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், அதுகுறித்து உடனடியாகப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். காவல்துறை டி.எஸ்.பி. தனபால் தலைமையில் வந்த போலீஸ் டீம், நிர்மலாதேவியின் வீட்டைப் பார்வையிட்டு, அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியது. 

நிர்மலாதேவி கைது செய்யப்பட்ட நேரத்தில் அந்த வீட்டை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சோதனையிட்டு, வீட்டிலிருந்து கம்ப்யூட்டர், சி.பி.யூ., செல்போன், டைரி உட்பட சில ஆவணங்களை எடுத்துச் சென்ற பின்னர், அந்த வீட்டுக்குச் சீல் வைத்தனர். பின்னர் அந்த சீல் அகற்றப்பட்டதாகத் தெரிகிறது. 

நிர்மலா தேவி

இந்தநிலையில் நிர்மலாதேவி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் திருட்டு தொழில்முறையில் திருடுவோர் நடத்திய திருட்டா அல்லது முக்கிய ஆவணங்களை திருடுவதற்காக விஷமிகள் செய்த திருட்டா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருட்டு நடந்த நாளில்தான் நிர்மலாதேவி ரிமாண்ட் முடிந்து மதுரை சிறையிலிருந்து விருதுநகர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவருடைய வீட்டில் நடந்த திருட்டு பற்றி காவல்துறையினர் நிர்மலாதேவியிடம் தெரிவித்தனர். இதைக் கேட்டு அவரிடமிருந்து எந்த ரியாக்ஷனும் வரவில்லை. வருகிற 23-ம் தேதிவரை அவரின் ரிமாண்டை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே ஜாமீன் கோரி நிர்மலா தேவி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இந்த நிலையில், சந்தானம் கமிஷனை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பது உள்பட சில கோரிக்கைகளை முன்வைத்து, வழக்கு தாக்கல் செய்த மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வழக்கறிஞர் செல்வகோமதியிடம் பேசினோம். ``நிர்மலாதேவி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் செய்ததால், முதலில் கல்லூரியில் `பணியிடங்களில் பாலியல் ரீதியான புகார்களை விசாரிக்கும் குழுவை' அமைத்திருக்க வேண்டும். அவர்கள் அமைக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைத்திருக்க வேண்டும். இதில் காமராஜர் பல்கலைக்கழகமும் சம்பந்தப்பட்டுள்ளதால் யு.ஜி.சி. கூறியுள்ளபடி இங்கும் பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியை அமைத்திருக்க வேண்டும். அப்படி அமைக்காதபோது, பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின் அடிப்படையில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்க வேண்டும். இவை எதையும் செய்யாமல், எடுத்தவுடன் விசாரணைக் கமிட்டியை ஆளுநர் நியமித்துள்ளார். அதேநேரம் சி.பி.சி.ஐ.டி-யும் இந்த வழக்கை விசாரிக்கிறது. இது ஏற்புடையது அல்ல. ஆளுநருக்கு இதுபோன்ற விசாரணைக் கமிட்டி அமைக்க அதிகாரமில்லை. இந்தப் பிரச்னையை அடிப்படையிலிருந்து நடவடிக்கை எடுக்காமல், எடுத்தவுடன் விசாரணைக் குழுவை நியமித்துள்ளார்கள். இந்த விசாரணைக்குழுவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதும் தெரியவில்லை'' என்றார்.

இவர் தாக்கல் செய்த மனுவின் சில கோரிக்கைகளை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், சந்தானம் கமிஷனுக்குத் தடைவிதிக்க மறுத்துவிட்டது. அதேநேரம், இதே கோரிக்கைகளை முன்வைத்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கணேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் ஆளுநர் அலுவலகம் மற்றும் உள்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதுபற்றி நம்மிடம் பேசிய காமராஜர் பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ``சந்தானம் கமிஷனுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று தெரியவில்லை. ஆளுநர் ஒரு செய்தியாளர் சந்திப்பு மூலமாகத்தான் சந்தானம் கமிஷனை அறிவித்தார். அதற்கு அரசு அங்கீகாரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்த நிலையில் இந்த விசாரணைக்குழு சிறைக்குச் சென்று விசாரணை நடத்த விதிகள் உள்ளதா என்று தெரியவில்லை. சந்தானம் குழு, காமராஜர் பல்கலைக்கழகத்தின் அதிகாரத்துக்குள் நியமித்த விசாரணைக் குழு போல உள்ளது என்று தகவல் வருகிறது. அப்படியே துணைவேந்தர் ஒரு குழுவை நியமித்தாலும், அதற்கு செனட், சிண்டிகேட்டைக் கூட்டி ஒப்புதல் பெற்ற பின்னரே அதுபோன்றதொரு குழுவை நியமிக்க வேண்டும். ஆனால், அந்த நடைமுறைகள் எல்லாம் பின்பற்றப்படவில்லை. இது ஆளுநர் நியமித்த குழுவா, துணைவேந்தர் நியமித்த குழுவா என்ற சந்தேகம் இருந்தாலும், இது ஒரு முறையான விசாரணைக் குழுவே இல்லை'' என்றார்.

நிர்மலா தேவி

நிர்மலாதேவி விவகாரத்தில் உண்மையைக் கண்டறிய சந்தானம் தலைமையிலான விசாரணைக் குழுவை ஆளுநர் நியமித்ததால், இதே விவகாரம் குறித்து விசாரிக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரை நியமித்த விசாரணைக் கமிட்டி கலைக்கப்பட்டதாக ஆளுநர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். படு ஸ்பீடாகச் செயல்பட்ட ஆளுநர் பன்வாரிலால், விசாரணைக் குழு அமைக்கத் தனக்கு அதிகாரம் உள்ளதாகக் கூறி `கவர்னர் கைடு' என்ற சட்டப் புத்தகத்தையும் செய்தியாளர்கள் முன்னிலையில் காட்டினார்.

ஆளுநர் மாளிகை இணையதளத்தில் சந்தானம் விசாரணைக் குழுவை ஆளுநர் நியமித்ததற்கான அறிக்கை மட்டுமே இடம்பெற்றுள்ளது. அது அரசாங்க உத்தரவு போல் இல்லை என்று பல்கலைக்கழக வட்டாரத்தைச் சேர்ந்த சிலர்  நம்மிடம் கூறினார்கள். ஆனால், உண்மையில் சந்தானத்தை நியமித்தது, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்தான். அதற்கான செலவுகளை பல்கலைக்கழகமே செய்து வருகிறது என்கிறார்கள்.

நிர்மலாதேவி விவகாரத்தில் துணைவேந்தர் மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில், பல்கலைக்கழகம் நியமித்த விசாரணைக் குழு எப்படி நியாயமான விசாரணை மேற்கொள்ளும் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுபோன்ற தனி நபர் விசாரணைக் குழுக்களை யார் வேண்டுமானாலும் நியமித்து, சிறைக்குச் சென்று கைதிகளிடம் விசாரிக்க முடியுமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இப்படிப் பல்வேறு சந்தேகங்கள் சந்தானம் விசாரணைக் குழு மீது எழுந்துகொண்டிருக்கிறது. 

விசாரணை அதிகாரியாக நியமித்து ஆளுநர் அளித்த உத்தரவு நகல் கிடைக்குமா என்று விசாரணை அதிகாரி சந்தானத்திடம் கேட்டோம். ``அது என்னிடம் இருக்கிறது. நான் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்கும்போது அந்த உத்தரவை அதில் இணைத்திருப்பேன்'' என்றார் அவர். 

இதற்கிடையே விருதுநகருக்கு ஆளுநர் பயணம் மேற்கொண்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்