வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (11/05/2018)

கடைசி தொடர்பு:17:00 (11/05/2018)

`உயிர் போனாலும் 8 வழி சாலையை அனுமதிக்க மாட்டோம்' - ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்த விவசாயிகள்

சேலம் டு சென்னை 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயச் சங்கம் மற்றும் நாம் தமிழர் சார்பாகச் சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் பேசிய தமிழக விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் சுந்தரம், ''இந்தியாவில் விவசாயம் அழிந்து வருகிறது. விவசாயத்தை ஊக்குவித்து நதிநீர் இணைப்பதை பற்றி ஆலோசிக்காமல் விளை நிலங்களை எப்படி அழிப்பது, மரங்களை எப்படி வெட்டுவது, கனிம வளங்களை எப்படி கொள்ளையடித்துச் செல்வது என்ற திட்டத்துடன் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது.

சேலம் டு சென்னை 8 வழிச் சாலை என்பது பொதுமக்களுக்கானது அல்ல. சேலத்தில் உள்ள கனிம வளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு செல்லும் கார்ப்பரேட் நிறுவனத்துக்காக 8 வழி சாலையும் சேலம் விமான நிலையம் விரிவாக்கமும் செய்கிறார்கள். சுதந்திர நாட்டில் பொதுமக்களின் கருத்துகளைக் காதில்கூட வாங்காமல் அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி அராஜகமாக விளைநிலங்களை அழித்து ரோடுகள் போடும் வேலையைத் தொடங்கியிருக்கிறார்கள். வீட்டையும் விவசாய நிலத்தையும் இவர்களுக்குக் கொடுத்துவிட்டு நாங்கள் எங்கே செல்ல முடியும். நிச்சயம் ஒரு அடி நிலம்கூட அந்நியர்களுக்குக் கொடுக்க மாட்டோம். இது மக்களுக்கான திட்டம் அல்ல. கொள்ளையடிப்பவர்களுக்கான திட்டம். அதனால் எங்கள் உயிர் போனாலும் எங்க நிலத்தின்மீது யாரையும் கை வைக்க விட மாட்டோம்'' என்று ஆவேசமாகப் பேசினார்.