வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (11/05/2018)

கடைசி தொடர்பு:18:08 (11/05/2018)

`உடனே 100ஐ தொடர்பு கொள்ளுங்கள்’ - பொதுமக்களை அலெர்ட் செய்த போலீஸ்

பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றச்செயலில் ஈடுபடுவர்கள்மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தக் கூடாது என்று பெரம்பலூர் காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில நாள்களாகக் குழந்தைகள் கடத்தும் வடமாநிலக் கும்பல் உலாவுவதாகப் பீதி அடைந்துள்ளனர். இதைச் சமூக வலைதளங்களான முகநூல், வாட்ஸ்அப்பில் வட மாநிலங்களிலிருந்து நூற்றுக்கணக்கானோர் கோடை விடுமுறையைப் பயன்படுத்தி, தமிழகத்தில் குழந்தைகளைக் கடத்த வந்துள்ளதாகத் தகவல் பரவியதையடுத்து, பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த வதந்தியால் சந்தேகப்படும் நபர்களைக் தாக்கும் சம்பவங்களும் தொடர்ந்துவருகின்றன. தமிழகம் முழுவதும் குழந்தையைக் கடத்தும் கும்பல் ஊடுருவி இருப்பதாகப் பொதுமக்களிடம் சந்தேகமும் ஏற்பட்டிருப்பதால் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பல மாவட்டங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் பெரம்பலூர் காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுவது யாதெனில், தற்சமயம் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றில் வடமாநிலங்களிலிருந்து பெண்கள் மற்றும் இளைஞர்கள் வந்து குழந்தைகளைக் கடத்துவது போன்றும், அவர்களை பொதுமக்கள் பிடித்து அடிப்பது போன்ற செய்திகள் வெளியாகிறது. இதுபோன்று குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்கள் என யாராவது சந்தேகம் ஏற்படும் வகையில் தென்பட்டால் அவர்களைப் பற்றிய தகவல்களை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கோ அல்லது கீழ்க்காணும் தொலைபேசி எண்களுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. (அவசர உதவிக்குத் தொலைபேசி எண்-100 மற்றும் மாவட்டக் காவல்துறை அலுவலகத் தொலைபேசி எண்கள் 04328 - 224910, 04328 - 224962 என்ற எண்களில் தகவல் தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.)

தங்கள் பகுதிகளில் யாரேனும் அரசுக்குப் புறம்பாக மணல் கடத்தலில் ஈடுபட்டாலோ அல்லது அது சம்பந்தமாகத் தகவல் எதுவும் கிடைத்தாலோ அது பற்றிய தகவல்களையும், அரசுக்குப் புறம்பாகத் தங்களில் யாரேனும் பான் மசாலா, குட்கா போன்ற போதைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருப்பது அல்லது விற்பனை செய்வது பற்றிய தகவல் கிடைத்தாலோ சம்பந்தமான தகவல்களை உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையங்களுக்கோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் 
மாறாகக் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைத் தாங்களே தாக்குவது போன்ற விபரீத செயல்களில் ஈடுபடக் கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள்மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்'' எனக் கூறப்பட்டுள்ளது.