வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (11/05/2018)

கடைசி தொடர்பு:18:25 (11/05/2018)

விபத்துகளைக் குறைக்க இந்தியாவிலேயே முதன்முறையாகக் கரூரில் அசத்தல் முயற்சி!

''இந்தியாவிலேயே தமிழகத்தில் உள்ள கரூரில் முதன்முதலாக ரூ.39.72 லட்சம் மதிப்பில் கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பெருவாரியான சாலை விபத்துகள் குறையும்'' எனப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் இன்று (11.05.2018) நடைபெற்ற விழாவில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழக போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலர் மற்றும் போக்குவரத்துத்துறை ஆணையர் சமயமூர்த்தி ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் ரூ.39.72 லட்சம் மதிப்பில் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளத்தைத் திறந்து வைத்து ஓட்டுநர் உரிமம் பெறுபவர்கள், கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படுவதைப் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில், பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "இந்தியாவிலேயே முதல்முறையாகத் தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் தேர்வுதளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி மாணவர்களால் மென்பொருள் மூலம் தேர்வுதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2.50 கோடி வாகனங்கள் இயக்கப்படுகிறது. அதன் காரணமாக ஆண்டுக்கு 16,000 பேர் விபத்துகளில் இறக்கின்றனர். இதைக் குறைப்பதற்காகவும் சாலை விதிகளை கடைப்பிடிப்பதற்காகவும் தமிழகத்தில் 30 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரு போக்குவரத்து ஆய்வாளர் அமைக்கப்படவுள்ளார்.

சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதற்காகவும் சாலை பாதுகாப்பை அதிகரிக்கவும் முதலமைச்சர் ரூ.20 கோடியிலிருந்து ரூ.60 கோடியாக உயர்த்தி வழங்கியுள்ளார். இதில், கரூர் மாவட்டத்துக்கு ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விபத்து நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு 10 உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலை விதிகளை மீறியதாக ரூ.2.25 லட்சம் ஓட்டுநர் உரிமம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக 6 சதவிகித வாகன விபத்து குறைந்துள்ளது. சாலை பாதுகாப்புக் குறித்து அரசு சட்டங்கள் இயற்றினாலும் அதை, தனிமனித ஒழுக்கத்துடன் வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க முன்வர வேண்டும். அதன் மூலமாக விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.