வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (11/05/2018)

கடைசி தொடர்பு:18:50 (11/05/2018)

காவனூர், மருங்கூரில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைக்கவில்லை! தமிழக அரசு அறிவிப்பு

விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்தில் முதல்கட்டமாக நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கும் பொருட்டு 45 இடங்களில் இது போன்ற பணிகள் நடைபெற்றுவருகிறது. பாறை உள்ள இடங்களில் பாறைகளை அகற்றி கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே காவனூர், மருங்கூர் கிராமங்களில் பொதுப்பணித்துறை ஏரியில் ராட்சச கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகள் நடைபெறுவதாக அறிந்து அப்பகுதிக்குச் சென்று எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர், இது குறித்து அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்காமல் பணிகளைத் தொடரக் கூடாது எனவும் கூறினார்கள்.

 ஹைட்ரோகார்பன்

இது குறித்து தகவல் அறிந்து தமிழக அரசின் மாநில நீர்வள, நிலவள திட்ட மேலாண்மை ஆலோசகர் ராஜகோபால், அதிகாரிகளுடன் வந்து காவனூர் கிராமத்தில் பணி நடைபெறும் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜகோபால், ''இங்கு திட்டப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்தில் முதல்கட்டமாக நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கும் பொருட்டு 45 இடங்களில் இதுபோன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. பாறை உள்ள இடங்களில் பாறைகளை அகற்றி கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் இந்தக் கிணறுகள் மூலம் தண்ணீரை சேமித்து கோடைக்காலங்களில் ஏரி வறண்டாலும் இந்தக் கிணறு மூலம் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் சுற்றி உள்ள விவசாய விளைநிலங்கள் பயன்பெறும். இப்பணி உலக வங்கி மூலம் நடைபெற்று வருகிறது. கிணறு அமைக்கும் பணி, ஏரியில் உபரிநீர் செல்லும் மதகு ஆகிய பணிக்கு 75 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. மற்றபடி அச்சப்படும் அளவுக்கு எவ்வித திட்டமும் இல்லை'' எனத் தெரிவித்தார்.