வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (11/05/2018)

கடைசி தொடர்பு:19:20 (11/05/2018)

எப்படிக் கொல்லப்பட்டார் சூனாம்பேடு சிற்றரசு? - அதிர்ச்சி அளித்த லாக்அப் மரணம்

சிற்றரசு

காஞ்சிபுரம் மாவட்டம், சூனாம்பேடு காவல் நிலையத்தில் அரசு ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் சமூக ஆர்வலர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். 

சூனாம்பேடு காவல் நிலையத்தில் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், கைதி சிற்றரசு 02.05.2018 அன்று அதிகாலையில் மர்மமான சூழலில் உயிரிழந்தார். சிற்றரசு கழிவறையில் தான் அணிந்திருந்த நீல நிற ஜட்டியைக் கயிறுபோல் பயன்படுத்தி, கழுத்தைச் சுற்றி தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தி  “சிற்றரசு தன் ஜட்டியைக் கயிறுபோல் பயன்படுத்தி, கழுத்தைச் சுற்றி தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை, விசாரணை அதிகாரிகளின் தரப்பில் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா அதை உறுதிப்படுத்துவதாக மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹடிமானி என்னிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார். நீதிமன்ற நீதிபதி விசாரணை முடிந்ததாகவும் அவர் எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். 

பின்வரும் கேள்விகள் சிற்றரசின் மரணம் ஏன் கொலையாக இருக்க முடியாது என்ற சந்தேகத்தைப் பலமாக எழுப்புவதாக உள்ளது. 
 தற்கொலை முயற்சி நடந்த இடம் சிறையிலுள்ள கைதி அறையிலுள்ள கழிவறை என இருக்கையில் சிசிடிவி கேமராவில் கைதி அறையின் நுழைவாயில் மட்டுமே பதிவாகும் நிலை இருக்கையில், கழிவறையில் நடந்த இச்சம்பவத்தை சிசிடிவி கேமரா எப்படி பதிவு செய்யும்? ஒரே ஒரு ஜட்டி துணையுடன் தாழ்ப்பாளில் ஒரு முணையை மாட்டி கழுத்தைச் சுற்றி தூக்கிட்டு தற்கொலை செய்வது சாத்தியமா? அதுவும் முடிச்சு இல்லாமல் இருந்தால் ஜட்டியின் அளவை கணக்கில் கொண்டால் இது சாத்தியம்தானா? 

ஒரு முணையைத் தாழ்ப்பாளில் மாட்டியிருந்தபோது தாழ்ப்பாளே உடைந்து பெயர்ந்து வந்துள்ள நிலையில் உயிரிழப்பு என்பது சாத்தியமா. தாழ்ப்பாள் கழிவறைக் கதவின் நடுப்பகுதியில் இருந்ததாகவே சொல்லப்படுகிறது. அது உண்மையெனில் கழிவறையின் உயரம் தோராயமாக 5 அடி என இருக்கையில், அதாவது 2.5 அடி மட்டுமே தரைமட்டத்திலிருந்து தாழ்ப்பாள் இருந்துள்ளது எனக்கொண்டால் அதில் ஜட்டியை மாட்டி தற்கொலை செய்துகொள்வது என்பது சாத்தியமா? 

கழுத்தின் முன்புறம் மற்றும் கொஞ்சமாகப் பக்கவாட்டில் மட்டுமே கழுத்து இறுக்கப்பட்டதற்கான அறிகுறி தோலில் இருக்கும்போது முழுமையாகக் கழுத்து இறுக்கப் படாத நிலையில் உயிரிழப்பது என்பது தற்கொலை மூலம் சாத்தியம்தானா. தடயவியல் புத்தகங்களில், கழுத்தை வேறு ஒருவர் நெறிக்கும் சூழலில் மட்டுமே ஊதா மற்றும் நீலநிற ரத்தக் கசிவுடன் தோலில் ஏற்படும் காயம் (ECCHYMOSES) சாத்தியம் என இருக்கையில், தற்கொலை மூலம் தூக்கிடும்போது அது சாத்தியமல்ல என்பதும் தெளிவாக இருக்கையில் அது ஏன் கொலையாக இருக்கக் கூடாது? மேலும், தூக்கிட்டு தற்கொலை செய்யும்போது தோலில் ஏற்படும் காயம் கோணலாக (Oblique) இருக்கும் என்பதும் புத்தகங்களில் தெளிவாக இருக்கும்போது, சிற்றரசுவின் கழுத்தில் உள்ள காயத்தைப் பார்த்தால் அது பெரும்பாலும் நேர்கோட்டில் இருப்பதாகவே உள்ளது மீண்டும் அவர் ஏன் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடாது என்ற முக்கிய கேள்வியை எழுப்புவதாகவே உள்ளது. மேலும், அக்காயம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என இருந்தால் கழுத்தில் தற்போது இருக்கும் இடத்துக்கு மேலே அக்காயம் இருந்திருக்கும் என்பதையும் விசாரணை கணக்கில் கொள்ள வேண்டும். காவல் நிலையத்தில் அவர் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற புகார் வந்துள்ள நிலையில், அதன்மூலம் ஏற்பட்ட காயத்தையும் பிரேத பரிசோதனை அறிக்கை கணக்கில் கொள்ளுமா. பிரேத பரிசோதனையின்போது எடுக்கப்படும் வீடியோ கிராஃபி காட்சிப் பதிவு பாதிக்கப்பட்டவருக்கு சிரமமின்றி கிடைக்குமா. 

சென்னை உயர் நீதிமன்றமும் அவருடைய மனைவி வெண்ணிலா தொடர்ந்த வழக்கில் அவர் சார்பில் ஒரு மருத்துவரும் பிரேதப் பரிசோதனை செய்யும்போது உடனிருக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை தள்ளுபடி செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர் சார்பில் ஒரு மருத்துவர் கூட இருப்பது விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காது என இருந்தும் ஏன் உயர் நீதிமன்றம் அதை நிராகரித்தது எனத் தெளிவாகத் தெரியவில்லை. 

மேற்கூறப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே உண்மை வெளிச்சத்துக்கு வரும்” என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க