வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (11/05/2018)

கடைசி தொடர்பு:19:45 (11/05/2018)

`ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டக் கூடாது' - ஆளுநரிடம் மனு அளித்த பா.ஜ.க நிர்வாகி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று விருதுநகரில் பொதுமக்களிடம் மனு வாங்கும் நிகழ்வில், ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டக் கூடாது என்று பா.ஜ.க நிர்வாகி மனு கொடுத்ததால் ஆளுநர் அதிர்ச்சி அடைந்தார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

நிர்மலாதேவி விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், ஆளுநரின் விருதுநகர் மாவட்ட விசிட் அனைவராலும் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை வருகை தந்த ஆளுநர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடத்திய பின் 11 மணிக்கு விருதுநகர் விருந்தினர் மாளிகையில் மனு வாங்க அமர்ந்தார். மனு கொடுக்க வந்தவர்களின் மனுக்களை அதிகாரிகளும் காவல்துறையினரும் படித்துப் பார்த்த பின் உள்ளே அனுப்பினார்கள். நிர்மலா தேவி விவகாரம் சம்பந்தமாக யாரும் மனு கொடுக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிக்க இந்த ஏற்பாடு என்று சொல்லப்பட்டது.

இதில், பா.ஜ.க இளைஞரணி கோட்டப் பொறுப்பாளர் சங்கர் பாண்டி என்பவர், `ஊழல்வாதியான ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவு மண்டபம் கட்டக் கூடாது. அதைத் தடுக்க வேண்டும்’ என்று மனு கொடுத்தார். இதைப் படித்துப் பார்த்த ஆளுநர், சற்று `ஜெர்க்’ ஆனவர், அரசியல் ரீதியான புகார்களை  சட்டரீதியாக அணுகுங்கள் என்று மனுவை அவரிடமே திருப்பி அளித்துள்ளார். அ.தி.மு.க அரசுக்கு பா.ஜ.க-வினர் ஆதரவாக இருந்து வரும் நிலையில், அக்கட்சி நிர்வாகியின் மனு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இதற்கிடையே மனு தாரர்களிடம் ஆளுநர் மனு வாங்கவில்லை. அதிகாரிகள்தான் வாங்குகிறார்கள் என்று புகார் எழுந்தது. திடீரென்று மக்கள், தங்களிடம் ஆளுநரே மனு வாங்க வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால் விருந்தினர் மாளிகை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்பு ஆளுநரே வெளியில் வந்து மனுக்களைப் பெற்றார்.

எக்காரணத்தைக் கொண்டும் ஊடகத்தினரை அருகிலயே அனுமதிக்கக் கூடாது என்று ஆளுநர் கூறிவிட்டதால், காவல்துறையினர் செய்தியாளர்களைத் தூரத்தில் வெயிலில் நிறுத்தி வைத்துவிட்டார்கள். இப்படி, ஆளுநரின் மனு வாங்கும் நிகழ்ச்சி பரபரப்பாகவே நடந்து முடிந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க