நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் உண்மை நிலை என்ன?- விளக்கச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் உண்மை நிலை என்ன? என்பது குறித்து மத்திய- மாநில அரசுகள் தெளிவுப்படுத்த வேண்டும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த ஜெம் என்ற தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தை கைவிடுவதாக ஜெம் நிறுவனம் அறிவித்துள்ளது. இது பல்வேறு சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், இத்திட்டத்தின் தற்போதைய உண்மை நிலை என்ன என்பதை மத்திய மாநில அரசுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.

மிகவும் செழிப்பான விவசாய பூமியான நெடுவாசல், நல்லண்டார் கொல்லை, வடகாடு, கருக்காகுறிச்சி, கோட்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை செய்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகளில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜெம் நிறுவனம் தீவிரமாக இறங்கியது. ``இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும். விவசாயம் முற்றிலுமாக அழிந்து போகும்'' என எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் போராட்டங்களில் இறங்கினார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு இரவு-பகலாக பல மாதங்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் இப்பிரச்னை இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது.

மக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, ஜெம் நிறுவனம் இத்திட்டம் தொடர்பாக எந்த ஒரு பணியையுமே மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஹரிபிரசாத், `நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிலத்தை எங்களது நிறுவனத்தின் பெயருக்கு மாற்றித் தரக்கோரி மத்திய -மாநில அரசுகளுக்குப் பல முறை கடிதம் அனுப்பியும் பலன் இல்லை. ஒரு வருடம் வரை காத்திருந்ததால் பல வகைகளிலும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் நெடுவாசல் திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளோம். இதற்கு மாற்றாக வேறு இடம் வழங்க வேண்டும்'' என பெட்ரோலிய துறைக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.” என்றார்.

இது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. ``ஜெம் நிறுவனம் நிரந்தரமாக வெளியேறிவிட்டதா? மக்களின் எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி மூலமாக இது செயல்படுத்தப்படுமா?. நெடுவாசலுக்கு மாற்றாக தமிழ்நாட்டில் வேறு எங்காவது இத்திட்டம் செயல்படுத்தப்படுமா? போராட்டம் நடத்திய பொதுமக்களில் 60-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்பொழுது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை தமிழக அரசு எப்பொழுது வாபஸ் வாங்கும்'' எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறார்கள்.  

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!