வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (11/05/2018)

கடைசி தொடர்பு:20:50 (11/05/2018)

ஜவுளிக் கடை ஆக்கிரமித்த நடைபாதையினை மீட்ட ராமநாதபுரம் நகராட்சி..!

 ராமநாதபுரத்தில் முறையான வசதிகள் இன்றி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திறக்கப்பட்டுள்ள தனியார் ஜவுளிக் கடையினர் ஆக்கிரமித்திருந்த நடைபாதை பகுதியினை நகராட்சி அதிகாரிகள் பெயரளவுக்கு மீட்டனர்.

ராமநாதபுரத்தில் முறையான வசதிகளின்றி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திறக்கப்பட்டுள்ள தனியார் ஜவுளிக் கடையினர் ஆக்கிரமித்திருந்த நடைபாதை பகுதியினை நகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.

ராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சாலை வழியாக மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலையில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை, கோட்டாட்சியர் அலுவலகம், டாக்டர் அப்துல்கலாம் பயின்ற மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியார் மருத்துவமனை ஆகியன அமைந்துள்ளன. மேலும் மதுரை -ராமேஸ்வரம் செல்லும் பேருந்துகள், தனியார் வாகனங்கள் இந்தச் சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் இந்தச் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.

ராமநாதபுரம் மருத்துவமனை முன்பு உள்ள ஜவுளி நிறுவனம் 

இந்நிலையில் மாவட்ட மருத்துவமனைக்கு எதிரில் தனியார் ஜவுளி நிறுவனம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 3 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் பயன்பாட்டிற்கான வாகன நிறுத்தம் ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால் இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை நடைபாதை பகுதியிலும், அரசு மருத்துவமனை பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு மத்தியிலும் நிறுத்தும் நிலை உள்ளது. பண்டிகைக் காலங்களில் இந்த நெரிசல் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனியார் ஜவுளி நிறுவனத்தினர் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையினை ஆக்கிரமித்து தங்கள் நிறுவனத்துக்குப் பாதை அமைத்துள்ளனர். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் மண்டலச் செயலாளர் வெங்குளம் ராஜு மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினருக்குப் புகார் செய்திருந்தார். இதையடுத்து ராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகள் புதிதாகத் திறக்கப்பட்ட தனியார் ஜவுளி நிறுவனத்தினர் ஆக்கிரமித்திருந்த நடை பாதையினை புல்டோசர் இயந்திரம் கொண்டு அகற்றினர்.