Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``ரஜினிகாந்த், இன்னமும் நடிகராக மட்டுமே இயங்குகிறார்'' - வேல்முருகன் குற்றச்சாட்டு

ஜினியின் பெயர் உச்சரிக்கப்பட்டாலே, கூடவே சர்ச்சைகளும் றெக்கை கட்டுகின்றன. அரசியலுக்குள் நுழைந்துவிட்டதாக ரஜினிகாந்த் அறிவிக்கும்போதே, `போராடுவதற்கென்று பலர் இருக்கிறார்கள். நமக்கு அது வேலைஅல்ல...' என்று அவர் தெரிவித்த கருத்துகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதன்பிறகு, மக்கள் பிரச்னைகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்துகொண்டிருந்த அவரது செயல்பாடுகளும் இணையதளங்களில் விமர்சனத் தாக்குதலுக்குள்ளானது. இதற்கிடையில் அவரது நடிப்பில், வெளியாகவிருக்கும் `காலா' திரைப்படத்தின் டீஸர் வெளியீட்டின்போதும் எதிர்க் கருத்துகள் எழுந்தன.

`கற்பி, போராடு, ஒன்று சேர்' என்ற அம்பேத்கரின் முழக்கம், சமூக விடுதலை, அரசியல் விடுதலை, பண்பாட்டு விடுதலை மற்றும் விளிம்புநிலை மக்களின் விடுதலை எனப் புரட்சிகரமான அரசியலை முன்வைக்கக்கூடிய முழக்கம்! இப்படி `மகத்துவம் வாய்ந்த முழக்கமானது `காலா' திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் முறை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இதுகுறித்துப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், ``ரஜினிகாந்த் படங்கள் எப்போதுமே இளைஞர்கள் - குழந்தைகளைக் கவரக்கூடிய வணிகப் படமாக இருக்கும் என்ற மதிப்பீடு உண்டு. எனவே, அவர் மூலமாகப் படத்தில் பேசப்படும் கருத்துகள் வெகுமக்களைப் போய்ச் சேரும். ஆனால், `காலா' படத்தில் என்ன விதமானப் பாத்திரத்தில் படம் முழுக்க ரஜினி வரப்போகிறார் என்பது தெரியாது. அந்த டீஸரில் அவர் தன்னை ஒரு ரவுடி போல காட்டிக்கொள்கிறார்; வசனமும் அப்படித்தான் இருக்கிறது. `புரட்சிகர கருத்தைச் சொல்லும் ஒரு படமாக இல்லாமல், ரவுடியாகச் சித்திரிக்கும் ஒரு படத்தில், அம்பேத்கரின் முழக்கங்களைப் பயன்படுத்தலாமா?'' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

காலா ரஜினி

இதற்கிடையில், காவிரிப் போராட்டத்தில், காவலர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ரஜினிகாந்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவு, போராட்டக்காரர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களால் கடும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது. இப்படித் தொடர்ச்சியாக அதிரவைத்துக் கொண்டிருந்தாலும்கூட இந்தச் சர்ச்சைகளுக்கான எந்தவொரு பதிலையும் தெரிவிக்காமலே கடந்து செல்கிறார் ரஜினிகாந்த்!

இந்நிலையில், `காலா' பட இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த விழாவில், முதன்முறையாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 8,500 பேருக்கு விழாவில் கலந்துகொள்ளச் சொல்லி விசேஷ அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அவர்களுக்கென தனியாக இருக்கைப் பகுதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது இதுவும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

``திரைப்பட விழாவில், தனது ரசிகர் மன்றத்தினரைப் பங்கேற்கச் செய்து, அதன்மூலம் தன் அரசியல் வளர்ச்சிக்கு அச்சாரமிடத் துடிக்கும் ரஜினிகாந்தின் அரசியல் எப்படி பொதுநலன் சார்ந்ததாக இருக்க முடியும்? இதே ரஜினிதான் கடந்த மாதம், `தமிழ்நாடே காவிரிக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது ஐ.பி.எல் போட்டிகளை கோலாகலமாகக் கொண்டாடுவது சரியல்ல. எனவே, போட்டியை நிறுத்தினால் நல்லது. அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்களது கைகளில் கறுப்பு நிற பட்டை அணிந்து விளையாடலாம்' என்றெல்லாம் அக்கறையோடு அறிவிப்பு கொடுத்தார். ஆனால், இப்போது அவரே கோலாகலமாக இப்படியொரு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார். காவிரிப் பிரச்னை இன்னும் தீர்ந்துவிடாத நிலையில், தனது படத்தின் பாடல் வெளியீட்டை இவ்வளவு தடபுடலாக நடத்துவதே தவறானது. அத்தோடு நில்லாமல், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கோணத்தில், சினிமா விழாவையே அரசியலுக்கான அறிவிப்பு மாநாடாகவும் ஒருசேர நடத்திவிடத் துடிக்கும் ரஜினிகாந்தின் செய்கை எவ்வளவு குரூரமானது....?

நீட் தேர்வு அலைக்கழித்தல், இன்னமும் காவிரித் தண்ணீர் கிடைக்காத வறட்சி என ஒட்டுமொத்தத் தமிழகமும் தவித்துக் கிடக்கும் சூழலில், இப்படியொரு கொண்டாட்டம் தேவைதானா? ஐ.பி.எல் போட்டியையே நிறுத்த வேண்டும் என்று அறிவுரை கூறிய ரஜினிகாந்த், தனது பட இசை வெளியீட்டை இவ்வளவு கோலாகலமாக நடத்தியிருப்பது நியாயமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ரஜினிகாந்தான் பதில் சொல்லவேண்டும்'' என்று கொதிக்கிறார்கள் பொதுநல ஆர்வலர்கள்.

ரஜினிகாந்த்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், `காலா' இசை வெளியீட்டு விழா குறித்துப் பேசுகையில், ``காவிரியில் நமக்கு உரிய உரிமை இன்னமும் கிடைக்கப்பெறாமல் நாம் அல்லாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஐ.பி.எல் கிரிக்கெட் தேவையில்லை... தவிர்த்திருக்கலாம் என்று சொன்னவர் ரஜினிகாந்த். இன்னமும்கூட காவிரிப் பிரச்னை தீர்க்கப்படவில்லை என்ற சூழலில், ரஜினியும்கூட இவ்வளவு பிரமாண்டமான விழாவாக நடத்தியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். கோடிக்கணக்கான மக்களின் ஒட்டுமொத்த உயிர்ப் பிரச்னையாக இருக்கிற காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காத இந்தச் சூழலிலும்கூட ரஜினிகாந்த், தான் ஒரு நடிகர் என்ற அடிப்படையில் மட்டுமே இன்னமும் இயங்கிவருகிறார்.

லட்சக்கணக்கான மாணவர்களின் பிரச்னையாக நீட் தேர்வு இருந்துவருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு அலைந்து சென்று தேர்வு எழுதி துயரம் அனுபவித்து வருகிறார்கள். இந்த அலைக்கழிப்பினால், நீட் தேர்வு சமயத்தில் மட்டும் பெற்றோர் மூவர் இறந்திருக்கிறார்கள். `தேர்வில் வெற்றிபெற வேண்டும்' என்று மாணவர்கள், கடவுளை வேண்டிக் கட்டிக்கொண்ட கயிற்றைக்கூட அறுத்தெறிந்துவிட்டு தேர்வு எழுதச் சொல்லியிருக்கிறார்கள். ஆன்மிக அரசியல் பற்றிப் பேசும் ரஜினிகாந்த், இதுபற்றிகூட இன்னமும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. 

பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டேன் என்று அறிவித்துவிட்டவர் இப்போதுகூட மக்கள் பிரச்னை மற்றும் அவர்களது நலன்களைப் பற்றிக் கவலைப்படாமல், தனது பட வியாபாரத்தைக் கோடிகளில் குவிக்கவேண்டும் என்ற நோக்கில் மட்டுமே செயல்பட்டுவருவது எந்தவகையான பொதுவாழ்க்கை என்று தெரியவில்லை....'' என்றார் வேதனை கலந்த குரலில்.

ரஜினிகாந்துக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் ரஜினி ரசிகர் மன்றத்தினர், ``விமர்சனங்களுக்கு எதிர் கருத்து கூறவேண்டாம் என்று எங்கள் தலைவர் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். அதனால், நாங்கள் பதில் ஏதும் கூற விரும்பவில்லை'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டனர்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement