கட்சி தொடங்கிய நடிகர்கள் இதுவரை மக்களுக்காக என்ன செய்தார்கள்?- முதல்வர் பழனிசாமி கேள்வி

``புதிதாகக் கட்சி தொடங்கும் நடிகர்கள், நதிகள் இணைப்பைப் பற்றி பேசுகின்றனர். அவர்கள் தமிழக மக்களுக்காக இதுவரை என்ன செய்தார்கள் ..?" என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


முதல்வர் பழனிசாமி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் 2 -வது குடிநீர்த் திட்டப்பணிகள் தொடக்க விழா, பல்வேறு பணிகள் அடிக்கல் நாட்டுவிழா மற்றும் நடத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கோவில்பட்டி 2 -வது பைப் லைன் திட்டப் பணிகளில், 10 மேல்நிலைத் தொட்டிகளில் 7 தொட்டிகள் மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதில் 3 மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட வில்லை. நகராட்சிக்குள் 63.12 கி.மீ பரப்பளவில் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்படவே இல்லை. இந்நிலையில் இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். 

மாலை 3 மணிக்கு விழா நடக்கவிருப்பதாகச் சொல்லி அரசு உதவி பெற வந்த, பயனாளிகளை மதியம் 1 மணிக்கே வரச் சொல்லி இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர். இருப்பினும் ஆயிரம் பேர் அமரக்கூடிய அரங்கில் பல இருக்கைகள் காலியாகவே கிடந்தன. இருப்பவர்களும் தண்ணீர் குடிக்க இடையில் யாரும் எழுந்து செல்லக் கூடாது என்பதற்காக, அனைவரின் இருக்கைகளிலும் தண்ணீர் பாட்டில், பிஸ்கட் முதலிலேயே வைக்கப்பட்டுவிட்டன. இவர்களைக் கண்காணிக்க 10 வரிசைக்கு 2 பெண் காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். பத்திரிகையாளர்களும் 2 மணி முதல் இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர். ஆனால், விழா 5 மணிக்குத் தொடங்கியது. 5.05 க்குதான் முதல்வர் மேடை ஏறினார். 

 

இதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``கோவில்பட்டி மக்களின் நீண்டகால கனவுத் திட்டமான கோவில்பட்டி 2 -வது பைப்லைன் திட்டம்  ரூ.81 கோடியே 82 லட்சம்  அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் பயனடைவார்கள்,
நாளொன்றுக்கு இதன் மூலம் 190.49 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.  

இந்தியாவில் உணவு தானிய உற்பத்தியில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. அதே போல, உயர்கல்வியிலும் மருத்துவத்திலும் தமிழகம்தான் சிறந்து விளங்கி வருகிறது.
இவ்வாறு பல துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அரசைக் குறை சொல்லியேப் பழகிய எதிர்க்கட்சிகள் குறை சொல்லி வருகின்றனர்." எனத் திட்டங்கள் மற்றும் சாதனையைப் பற்றியே 30  நிமிடத்திற்கும் மேல் பேசிய அவர், இறுதியாக, 

``இன்று நடிகர்கள் புதிது புதிதாகக் கட்சி தொடங்குகிறார்கள். கட்சி தொடங்குவது தவறில்லை. ஆனால், கட்சி தொடங்கிய உடனேயே, நதி நீர் இணைப்பைப் பற்றி பேசுகிறார்கள். நதி நீர் இணைப்பைப் பற்றி பேசும் இவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக என்ன செய்தார்கள்.? " எனக் கேள்வி எழுப்பி முடித்தார். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!