ஏழை மக்களுக்கு இலவச கண் பரிசோதனை, கண்ணாடி வழங்கும் மையம்!

சென்னையில் உள்ள பாலவாக்கத்தில் ஐவிஐ என்ற `இண்டியன் விஷன் இன்ஸ்டிட்யூட்’ என்ற அமைப்பின் இலவச கண் பரிசோதனை மையம் அமைச்சர் பாண்டியராஜனால் இன்று திறந்துவைக்கப்பட்டது.

சென்னையில் உள்ள பாலவாக்கத்தில் ஐவிஐ என்ற `இண்டியன் விஷன் இன்ஸ்டிட்யூட்’ என்ற அமைப்பின் இலவச கண் பரிசோதனை மையம், அமைச்சர் பாண்டியராஜனால் இன்று திறந்துவைக்கப்பட்டது.

சென்னை பாலவாக்கத்தில் `இண்டியன் விஷன் இன்ஸ்டிட்யூட்’(Indian Vision Institute) என்ற அமைப்பின் இலவச கண் பரிசோதனை மையத்தின் திறப்புவிழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், அவரது மனைவியுடன் பங்கேற்றார். இந்த மையம் கட்ட நிதியுதவி வழங்கிய ஆஸ்திரேலிய தூதரகத்தின், தலைமை தூதரக அதிகாரி சூசன் கிரேஸ் மற்றும் ஐவிஐ அமைப்பின் முதன்மைச் செயல் அதிகாரியான வினோத் டேனியல் ஆகியோர் கலந்துகொண்டனர். மீனவர்கள், தினக்கூலி வேலை செய்யும் வறுமையில் வாடும் 25 பேருக்கு கண் பரிசோதனை செய்து கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

இலவச கண் பரிசோதனை மையம்

நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலிய தூதரக அதிகாரி சூசன் கிரேஸ், "வறுமையில் வாடும் மக்களின் கண்கள் சம்பந்தமான நோய்களைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சையளித்து, உதவி வரும் இந்த அமைப்புக்கு உதவியது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.

பரிசோதனை மையத்தின் திறப்புவிழாவுக்கு வந்திருந்த அமைச்சர் பாண்டியராஜன், தூதரக அதிகாரி உள்ளிட்ட அனைவருக்கும் வினோத் டேனியல் நன்றி தெரிவித்தார். பிறகு பேசிய அவர், "வறுமையில் வாடும் மக்களின் கண் பிரச்னைகளைக் கண்டறிந்து, தேவைப்படுவோர்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்குவதே இந்த மையம் துவங்கியதன் முக்கியமான நோக்கம். இதற்காக உதவிய அனைவருக்கும் நன்றி. இங்கு வருபவர்களுக்கு சோதனை செய்து பழைய கண்ணாடிகளுக்குப் பதிலாக புதிய கண்ணாடிகளும், தேவைப்பட்டால் அதை சரிசெய்தும் தருகிறோம். குறிப்பாக, சென்னை கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் ஏழ்மையானவர்களின் கண் பிரச்னைகளை சரிசெய்வதற்காகவே இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் தகவல்படி, தமிழ்நாட்டில் இந்த அமைப்பு 11 ஆயிரத்து 99 பெரியவர்களுக்கும், 67 ஆயிரத்து 577 சிறுவர்களுக்கும் கண் பரிசோதனை செய்துள்ளது. சென்னையில் மட்டும், 9 ஆயிரத்து 622 பெரியவர்களுக்கும், 59 ஆயிரத்து 185 சிறுவர்களுக்கும் பரிசோதனை செய்துள்ளது. கண் பரிசோதனை செய்ததோடல்லாமல், தேவைப்படுவோர்களுக்கு இலவசமாக கண்ணாடிகளையும் வழங்கியுள்ளது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!