``ஆச்சிங்றது வார்த்தை இல்ல... எங்க உணர்வு!” செல்லூர் ராஜுவுக்கு எதிராகக் குவியும் விமர்சனம் | Aachi is not just a word, Its within us, slams caste associations

வெளியிடப்பட்ட நேரம்: 10:49 (13/05/2018)

கடைசி தொடர்பு:10:49 (13/05/2018)

``ஆச்சிங்றது வார்த்தை இல்ல... எங்க உணர்வு!” செல்லூர் ராஜுவுக்கு எதிராகக் குவியும் விமர்சனம்

``உடன்பிறந்த சகோதரிகளையும் உறவினரின் மனைவியையும் மரியாதையாக ஆச்சி என்று அழைப்பதே எங்கள் வழக்கம். முன்பின் தெரியாத பெண்ணையும் ஆச்சி என்றுதான் நகரத்தார்கள் அழைப்பார்கள்.

 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நகரத்தார்கள்

“ஆச்சி... இந்த வார்த்தை, எங்க உயிருக்கும் உணர்வுக்குமான பந்தம். எங்கள் பாரம்பர்யத்தில், பருவம் அடைந்த பெண் பிள்ளைகளையும் வயதில் மூத்தவர்களையும் ஆச்சி என்றே மரியாதையோடு அழைக்கிறோம். அப்படிப்பட்ட உணர்வுமிக்க பந்தத்தையே, அமைச்சர் செல்லூர் ராஜூ கலங்கப்படுத்தியிருக்கிறார். இது, மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் மன்னிப்புக் கேட்காமல், எங்கள் ஒவ்வொருவரின் கொதிப்பும் அடங்கவே அடங்காது” - எடுத்ததுமே ஆக்ரோஷமாகப் பேசுகிறார், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞரான காந்திமதி.

சென்னையில் நடைபெற்ற 'காலா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “தென்னிந்திய நதிகளை இணைப்பதே எனது வாழ்நாள் கனவு“ என்றார். ரஜினியின் இந்தக் கருத்து பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “நதிகள் இணைப்பைப் பயன்படுத்தி, ரஜினியால் காரைக்குடி ஆச்சியைத்தான் பிடிக்கமுடியும். தமிழகத்தின் ஆட்சியை அல்ல“ என்றார். அது, காரைக்குடியில் உள்ள நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கொதிப்பில் தள்ளியிருக்கிறது. அந்தக் கொதிப்பின் ஒரு துளிதான் காந்திமதியின் ஆக்ரோஷக் குரல்.
 

அமைச்சருக்கு எதிரான போராட்டம்

`

“காரைக்குடி ஆச்சியைப் பிடிக்கமுடியும் என்று சொன்ன விதம், கையைப் பிடித்து இழுப்பது போன்று இழிவான அர்த்தத்தில் இருக்கிறது. காரைக்குடி மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் செட்டிநாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். ஓர் அமைச்சராக இருப்பவர் இது எதையும் பொருட்படுத்தாமல், பொதுவெளியில், மீடியாக்களுக்கு மத்தியில், இந்த வார்த்தையைச் சொல்கிறார். செல்லூர் ராஜூவின் இந்தப் பேச்சு மிகக் கேவலமானது” என வெடிக்கிறார் காந்திமதி.

“நகரத்தார்கள் எனச் சொல்லப்படும் நாங்கள், பூம்புகாரிலிருந்து இயற்கை மாற்றங்களின் காரணமாக, காரைக்குடிக்கு இடம்பெயர்ந்தவர்கள். அந்தக் காலத்திலேயே பர்மாவுக்குச் சென்று தொழில் பார்த்தவர்கள்.  பெண்களை மரியாதையோடு நடத்தத் தெரிந்தவர்கள். எந்தவொரு வம்புக்கும் போகாமல் சுயதொழிலால் முன்னேறிக்கொண்டிருக்கும் எங்கள் வீட்டுப் பெண்களின் மீது அமைச்சரால் இப்படியொரு வசவுச் சொல்லை வீசமுடிந்திருக்கிறது. ஒருவரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால், அவர்களையே நேரடியாகக் குறிப்பிட்டு பேச வேண்டும். ஏன் எங்கோ அமைதியாக இருக்கும் எங்களை, குறிப்பாக, எங்கள் பெண்களைப் பற்றி வக்கிரமாகப் பேசுகிறார்.  செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்கிறார், காரைக்குடியைச் சேர்ந்த முத்தையா.

அமைச்சர் செல்லூர் ராஜூ


காரைக்குடியைப் பூர்வீகமாகக்கொண்ட ராமசாமி, “உடன்பிறந்த சகோதரிகளையும் உறவினரின் மனைவியையும் மரியாதையாக ஆச்சி என்று அழைப்பதே எங்கள் வழக்கம். முன்பின் தெரியாத பெண்ணையும் ஆச்சி என்றுதான் நகரத்தார்கள் அழைப்பார்கள். அந்தச் சொல்லுக்கு அப்படியொரு மரியாதையைக் கொடுத்திருக்கிறோம். செல்லூர் ராஜூ வரம்புமீறி அடுத்தவரின் பெண்ணை கையைப் புடிச்சு இழுக்கமுடியும் என்பதுபோல தரக்குறைவாகச் சொல்லியிருக்கிறார். இது எங்கள் ஒட்டுமொத்த உறவுகளையும் புண்படுத்தியிருக்கிறது. காரைக்குடியில் நாங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து போராட்டம் பண்ணிட்டிருக்கோம். இனியும் அமைச்சர் அமைதியாக இருந்தால், எங்கள் போராட்டம் வேறு வழியில் தொடரும்” என்கிறார். 

“ஆச்சி என்று கிண்டலடித்துப் பேசிவிட்டு, நான் மனோரமா ஆச்சியைத்தான் அப்படிச் சொன்னென் என்று அமைச்சர் சொல்லியிருப்பது, கேலிக்குரியது. 'ஆட்சிக்கு எதுகை மோனையாக இருக்குமே என்றுதான் ஆச்சி என்றேன்' என்றெல்லாம் சொல்கிறார். தமிழில் எதுகை மோனையோடு பேசுவதற்கு நல்லாத்தான் இருக்கும். அந்த எதுகை மோனையையும் மரியாதையோடு பேசினால்தான் பெருமையாக இருக்கும் என்பது உயர் பதவியில் இருக்கும் அமைச்சருக்குத் தெரியாமல் போனதுதான் வருத்தமாக இருக்கிறது. அவர் எவ்வளவு சீக்கிரம் மன்னிப்பு கேட்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கேட்டுவிடுவது நல்லது” என்று தன் ஆதங்கத்தை முன்வைக்கிறார் இஞ்ஜீனியர் வள்ளியம்மை.


டிரெண்டிங் @ விகடன்