வெளியிடப்பட்ட நேரம்: 22:45 (11/05/2018)

கடைசி தொடர்பு:22:45 (11/05/2018)

``உடன் பிறந்த சகோதரி எனச் சொல்லக் கூடாது” திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்

தினகரன் திவாகரன் மோதல் வலுத்து வரும் நிலையில் சசிகலா வழக்கறிஞர் திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சசிகலா

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக வில் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வந்த நிலையில், சசிகலா உறவினர்களான திவாகரனுக்கும், தினகரனுக்கும் கடந்த சில நாள்களாகப் பிரச்னை நடந்து வந்தது. 'திவாகரன் ஒரு மன நோயாளி' போன்ற கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் தினகரன். திவாகரனும் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து ஊடகங்களில் பேசி வந்தார்.  இந்நிலையில் சசிகலா தரப்பிலிருந்து திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் திவாகரனுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், ``எனது கட்சிக்காரரின்(சசிகலா) இளைய சகோதரரான தங்கள் மீது அதிக பாசம் கொண்டவர். ஆனால், தற்போது உங்களில் முரண்பட்ட செயல்பாடுகளால், என் கட்சிக்காரர் கனத்த இதயத்துடன் இந்தச் சட்ட அறிவிப்பை உங்களுக்கு அனுப்புகிறார். சசிகலாவின் பெயரையோ, புகைப்படத்தையோ தாங்கள் (திவாகரன்)  பயன்படுத்தக் கூடாது. அதுபோல உடன் பிறந்த சகோதரி என ஊடகங்களில் பேசக் கூடாது. சசிகலா குறித்து  உண்மைக்குப் புறம்பான தகவல்களை தெரிவிக்கக் கூடாது. இந்த நோட்டீஸ் கிடைத்த பின்னரும் தொடர்ந்து பேசினால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.