வெளியிடப்பட்ட நேரம்: 22:12 (11/05/2018)

கடைசி தொடர்பு:22:12 (11/05/2018)

மன்னார்குடி வட்டாரத்தில் உலவும் ஜெயலலிதா `பாச ஸ்பீச்' வீடியோ!

டி.டி.வி.தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையில் ஜெயலலிதாவின் அடுத்த வாரிசு யார் என்று போட்டி நிலவி வரும் நிலையில் அந்தப் போட்டியில் புதிதாக சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப் பிரியாவும் இணைந்துள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவின் தலைமைக்கு எதிராக அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார். அவருக்கு ஆதவாக சில அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் குரல் கொடுத்தனர். அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றிருந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமித்தார். சசிகலா சிறைக்குச் சென்றதையடுத்து, அவருடைய அக்கா மகன் டி.டி.வி.தினகரன் துணைப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றார். அதன் பின்னர், ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். 

அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர் செல்வம் அணியும் இணைந்து அ.தி.மு.கவைக் கைப்பற்றினர். அதனையடுத்து, டி.டி.வி.தினகரன் தலைமையிலான அணி, அ.தி.மு.கவுக்கு உரிமை கொண்டாடி வந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசை டி.டி.வி.தினகரன் கடுமையாக எதிர்த்து வந்தார். மேலும், அ.தி.மு.கவை மீட்பேன் என்றும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் அடுத்த வாரிசு நான்தான் என்றும் கூறிவந்தார். இந்தநிலையில், கடந்த ஒரு மாத காலமாக சசிகலாவின் தம்பி திவாகரன், டி.டி.வி.தினகரனுக்கு எதிராகக் குரலை உயர்த்தியுள்ளார். டி.டி.வி.தினகரன் தன்னிச்சையாகச் செயல்படுகிறார், சசிகலாவுக்குத் துரோகம் செய்கிறார் என்று குற்றச்சாட்டுகளை வைத்தார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்துவருகிறார். 

இந்தநிலையில், சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணபிரியாவும் ஜெயலலிதாவின் அடுத்த வாரிசு நான் என்பது போல, அவருடைய நெருங்கிய வட்டாரங்களில் கூறிவருகிறார். அதற்கு வலுசேர்க்கும் விதமாக, கிருஷ்ண பிரியா திருமணம் நிகழ்வின்போது, `கிருஷ்ண பிரியா என்னுடைய மகள்' என்று ஜெயலலிதா பேசிய வீடியோவை நெருங்கிய வட்டாரங்களுக்கு அனுப்பிவருகிறார். அந்த வீடியோவில் ஜெயலலிதா, `அன்பு சகோதரர் ஜெயராமன், ஹைதராபாத்தில் உள்ள எனது இல்லப் பணிகளைப் பார்வையிடச் சென்றபோது எதிர்பாராத வகையில் அங்கு மறைந்தார். பர்கூர் தொகுதியில் நான் போட்டியிட்டபோது, அவர் அங்கு ஒரு மாதம் தங்கியிருந்து, அன்புடன் பணிகளை கவனித்துக்கொண்டவர். அவர் மறையும் போது இளம் மனைவியையும், 3 குழந்தைகளையும் விட்டுச்சென்றார். அவர்களை நான் எனது பாதுகாப்பில் எடுத்துக்கொண்டேன். கடந்த பல ஆண்டுகளாக எனது பாதுகாப்பில் வளர்ந்த எனது பெண் பிள்ளைக்கு(கிருஷ்ணப்ரியா) தான் இன்று திருமணம். ஜெயராமன் இருந்து செய்ய வேண்டிய திருமணத்தை அவர் இடத்திலிருந்து நான் செய்வதால் பெரும் மகிழ்ச்சியும், முழு மனநிறைவும் கொண்டேன்’ எனப் பேசியுள்ளார்.