வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (12/05/2018)

கடைசி தொடர்பு:01:00 (12/05/2018)

பள்ளி வாகனங்களிள் ஆய்வு மேற்கொண்ட ராமநாதபுரம் ஆட்சியர்!

 பள்ளி வாகனங்களை அதிகவேகத்தில் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என   வாகன ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது வாகனத்தின் அடியில் சென்று ஆய்வு மேற்கொண்டார் ஆட்சியர்.

பள்ளி வாகனங்களை அதிகவேகத்தில் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என   வாகன ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது வாகனத்தின் அடியில் சென்று ஆய்வு மேற்கொண்டார் ஆட்சியர்.

பள்ளி வாகனத்தில் அடியில் சென்று ஆய்வு செய்த ராமநாதபுரம் ஆட்சியர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 424 பள்ளிப் பேருந்துகளையும் ஆய்வு செய்யும் பணி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. பள்ளிப் பேருந்துகளில் முதல் உதவிப் பெட்டி இருப்பது, தீயணைப்புக்கருவி வைத்திருப்பது, அவசரக்கால  வழிக்கான கதவு உடனடியாக திறக்கக்கூடிய வகையில் இருப்பது, பிரேக் முறையாக இருப்பது, பேருந்தின் மேற்கூரை ஒழுகாத வண்ணம் இருப்பது என்பன உட்பட மொத்தம் 13 வகையான சோதனைகள் இந்த ஆய்வில் மேற்கொள்ளப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் பள்ளிப் பேருந்துகளின் தரம் குறித்து இன்று நேரில் ஆய்வு செய்தார். ஆய்விற்காகக்  கொண்டு வரப்பட்டிருந்த பள்ளி வாகனங்களின்  அடிப்பகுதிக்குச்   சென்று ஆய்வினை பார்வையிட்ட ஆட்சியர் நடராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளிகளின் பேருந்துகளையும் ஆய்வு செய்யும் பணியைத் தொடங்கி வைத்துள்ளோம். பேருந்துகளில் தவறு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து தவறு இருந்தால் அதைத் தெரிவித்து உடனடியாக சரி செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மீண்டும் அதே தவறு கண்டு பிடிக்கப்பட்டால் வாகன உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பள்ளிப்பேருந்துகளை ஓட்டுபவர்கள் மிகுந்த அனுபவசாலிகளாகவும், திறமையானவர்களாகவும் இருக்க வேண்டும். இவர்கள் அதிகவேகமாக பேருந்துகளை ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் போதும், திரும்ப வீடுகளில் வந்து இறக்கி விடும் போதும் அவசரப்படாமல் ஏற்றி, இறக்கிட வேண்டும். இதற்கென தனியாக ஒருவரைத் துணைக்கு வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகள் மற்றம் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் வராமல் பள்ளிக்கட்டிடங்கள் இருக்க வேண்டும். கட்டடங்களில் பாதிப்புகள் இருந்தால் அதை உடனடியாக சரி செய்து விட வேண்டும். ஆண், பெண் இரு பாலருக்கும் தனித்தனியாகக் கழிப்பறை வசதியும், குடிநீர் வசதியும் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள குறைகளைக் கண்டறியவும் தனியாகக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகிறது. முறையாகப் பராமரிக்கப்படாத பள்ளிக்கட்டடங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
ஆய்வின் போது ராமநாதபுரம் எஸ்.பி.ஓம்பிரகாஷ் மீனா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார், இயக்கூர்தி ஆய்வாளர்கள் விஸ்வநாதன், மாணிக்கம் உள்ளிட்டோர்  உடன் இருந்தனர்.