வெளியிடப்பட்ட நேரம்: 01:45 (12/05/2018)

கடைசி தொடர்பு:01:45 (12/05/2018)

மின்சார வாகனங்களுக்கு வருகிறது பச்சை நிற நம்பர் பிளேட்!

மின்சார வாகனங்களுக்கு பச்சை நம்பர் பிளேட் மூலம் பல சலுகைகளை அளிக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு

இந்தியாவில் தற்போதுவரை நான்குவிதமான நம்பர் பிளேட்டுகள் உள்ளன. ஐந்தாவதாக, மின்சார வாகனங்களைப் பச்சை நிற நம்பர் பிளேட்டுடன் அனுமதிக்க மத்திய சாலை போக்குவரத்து துறை கடந்த ஜனவரி மாதம் செயல் வரைவு தாக்கல் செய்திருந்தது. அதற்கான அனுமதி கிடைத்துவிட்டதாக சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

மின்சார வாகனம்

அவர் நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் "மின்சார வாகனங்கள் வாங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் பச்சை நிற நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. பெர்சனல் வாகனங்களுக்குப் பச்சை நம்பர் பிளேட்டில் வெள்ளை நம்பரும், கமர்ஷியல் வாகனங்களுக்கு மஞ்சள் நம்பரும் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார். மேலும், இந்த இதற்கான சுற்றறிக்கை ஒரு வாரத்தில் வந்துவிடும் என்றும் அதன் பிறகு இந்த வாகனங்களை புதிய முறையில் பதிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

மின்சார கார்

மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு பல வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. புதிய நம்பர் பிளேட்டில் பதிவு செய்யும் வாகனங்களுக்கு டோல் கட்டண சலுகை, பொது இடங்களில் தனி பார்க்கிங் வசதி, மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பார்க்கிங் சலுகை போன்ற பல சலுகைகளைத் தரவுள்ளது. 

தனியார் மட்டுமல்லாமல் பொது போக்குவரத்திலும் இதை அனுமதிக்க மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது. "2020-ம் ஆண்டு முதல் டாக்ஸி மற்றும் பேருந்து உரிமையாளர்கள் தங்களின் போக்குவரத்து சேவையில் ஆண்டுக்கு 1 சதவிகிதம் மின்சார கார்களையும், பேருந்துகளையும் சேர்க்கவேண்டும்" என்று கேட்டுக்கொள்ளப்போவதாகவும் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மின்சார டாக்ஸி

2022-ம் ஆண்டு இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து வாகனங்களும் மின்சாரத்தில் இயங்குவதாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறது மத்திய அரசு. இதன் ஒரு பகுதியாக "இன்ஜின்களின் மாசுகட்டுபாட்டு தரத்தை இன்னும் கடுமையாக்கவும், எலக்ட்ரிக் கார்களின் பேட்டரிக்கு தற்போது இருக்கும் 28 சதவிகித ஜிஎஸ்டியை 12 சதவிகதமாக மாற்றவும் முயற்சியில் செய்துவருவதாக" நிதின் கட்கரி கூறியுள்ளார்.