வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (12/05/2018)

கடைசி தொடர்பு:02:30 (12/05/2018)

பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற வீரபாண்டி கோவில் தேரோட்டம்!

பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற வீரபாண்டி கோவில் தேரோட்டம்.

தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வானத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டம்

தேனி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கெளமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவானது கடந்த செவ்வாய்க்கிழமை துவங்கியது. இத்திருவிழாவிற்கு திண்டுக்கல், கோவை, மதுரை, சிவகங்கை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வானத் தேரோட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் திருமதி பல்லவி பல்தேவ் தேரை வடம் பிடித்து இழுத்துத் தேரோட்டத்தை துவக்கிவைத்தார். தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளருமான சையதுகான் உட்படத் பலர் கலந்துகொண்டனர். தேரோட்டத்தில் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் கலந்துகொள்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் பன்னீர்செல்வம் வரவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர், தேரோட்டத்தை துவக்கிவைத்தார்.