1000 ரசிகர்களுடன் புனேவுக்கு புறப்பட்டது, சி.எஸ்.கே சிறப்பு ரயில்! | csk cricket team organises special train for fan to pune

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (12/05/2018)

கடைசி தொடர்பு:04:00 (12/05/2018)

1000 ரசிகர்களுடன் புனேவுக்கு புறப்பட்டது, சி.எஸ்.கே சிறப்பு ரயில்!

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மோதும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் நிர்வாகத்தின் சார்பாக 100 ரசிகர்கள் சிறப்பு ரயில் மூலமாக புனே நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் 13-ம் தேதி நடைபெற உள்ள போட்டியைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் சார்பாக 1000 ரசிகர்கள் சிறப்பு ரயில் மூலமாக புனே நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் 13-ம் தேதி நடைபெற உள்ள போட்டியைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில் - கிரிக்கெட்

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இரண்டு வருடங்களுக்குப் பின்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கி இருப்பதால், தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு ஆட்டம் நடைபெற்ற நிலையில், காவிரி பிரச்னை காரணமாக எழுந்த எதிர்ப்பால் பிற ஆட்டங்கள் அனைத்தும் புனே நகருக்கு மாற்றப்பட்டன. 

இந்த நிலையில், சி.எஸ்.கே அணி மோதும் போட்டியைக் காண்பதற்காக ஏப்ரல் 19-ம் தேதி சென்னையில் இருந்து ரசிகர்களுக்காகச் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ஏப்ரல் 20 -ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதும் போட்டியைக் காண்பதற்காக சென்னையில் இருந்து ’சி.எஸ்.கே விசில் போடு’ சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அதில் சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் 1000 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அங்குச் சென்று சி.எஸ்.கே அணியின் ஆட்டத்தைக் கண்டதுடன், அணியினரை உற்சாகப்படுத்தினார்கள். 

சி.எஸ்.கே அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வரும் 13-ம் தேதி புனே நகரில் நடக்கும் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டத்தைக் காண்பதற்காக சென்னையில் இருந்து மீண்டும் 1000 சி.எஸ்.கே ரசிகர்களை அழைத்துச் செல்ல அணி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ரசிகர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நேற்று மாலையில் சென்னையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் அவர்கள் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். 

ரசிகர்களுக்காக ரயில்

அந்தச் சிறப்பு ரயிலில் ஒரு ஏ.சி கோச்சுடன் சேர்த்து மொத்தம் 13 பெட்டிகள் உள்ளன. அனைத்தும் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள். அதில் 1000 பேர் பயணம் செய்கிறார்கள். இது குறித்து சி.எஸ்.கே அணியின் நிர்வாகத் தரப்பில் கூறுகையில், ’’புனே நகருக்குச் சிறப்பு ரயிலில் அழைத்துச் செல்லப்படும் ரசிகர்களுக்கு கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்கான டிக்கெட், உணவு, தங்குமிடம், ஜெர்ஸி, புனே நகரில் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம். 13-ம் தேதி நடக்கும் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு அங்கிருந்து இந்தச் சிறப்பு ரயில் 14-ம் தேதி சென்னைக்கு கிளம்பும். ரசிகர்களுக்காக இந்தச் சிறப்பு ஏற்பாட்டைச் செய்திருக்கிறோம்’’ என்றார்கள். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரயிலில், தமிழகத்தைச் சேர்ந்த 1000 ரசிகர்கள், சி.எஸ்.கே அணியின் மஞ்சள் வர்ண டி.ஷர்ட் அணிந்தபடி சென்னை செண்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து உற்சாகமாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், மாலையில் எங்குத் திரும்பினாலும் மஞ்சள் நிறமாகவே காட்சியளித்தது.